Portrait of woman blocking ears with hands while man snoring on bed
ANTARABANGSAhealth

குறட்டைக்கும் உயர் இரத்த அழுத்தத்திற்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பு

கான்பெரா –  ஜூன் 23 ;-   ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் குறட்டைக்கும் உயர் இரத்த அழுத்தத்திற்கும் இடையே உள்ள தொடர்பை கண்டறிந்துள்ளனர்.

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தின் தூக்கம் பற்றி ஆராயும் விஞ்ஞானிகளால் நடத்தப்பட்ட ஆய்வின் படி, இரவில் வழக்கமாக குறட்டை விடுபவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் கட்டுப்பாடற்ற உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு நபரின் இரத்த நாளங்களில் அழுத்தம் அதிகமாக இருக்கும் போது உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இது இதயத்திற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் மற்றும் மாரடைப்பு, பக்கவாதம், இதய செயலிழப்பு மற்றும் இதய நோய்களுக்கு வழிவகுக்கும்.

12,287 பங்கேற்பாளர்களில் 15 சதவீதம் பேர் ஆறு மாத கண்காணிப்பு காலத்தில் சராசரியாக இரவின் 20 சதவீதத்திற்கும் மேலாக குறட்டை விட்டதாகவும், குறட்டை விடாத பங்கேற்பாளர்களை விட  குறட்டை விடுபவர்களுக்கு அதிக அளவு  3.8 மிமீ Hg அதிக சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் மற்றும் 4.5 மிமீ Hg அதிக டயஸ்டாலிக் இரத்த அழுத்தம்  இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

குறட்டை மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை ஆராய்வதற்கு நீண்ட காலமாக பல இரவு வீட்டு அடிப்படையிலான கண்காணிப்பு தொழில்நுட்பங்களை முதன்முதலில் ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழக ஆய்வு பயன்படுத்தியது. ஆய்வில் பங்கேற்றவர்கள் நடுத்தர வயதுடையவர்கள் மற்றும் 88 சதவீதம் பேர் ஆண்கள்.

“முதன்முறையாக, வழக்கமான இரவு நேர குறட்டைக்கும் உயர் இரத்த அழுத்தத்திற்கும் இடையே குறிப்பிடத்தக்க தொடர்பு இருப்பதாக நாம் புற நிலையாக சொல்ல முடியும்” என்று ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவம் மற்றும் பொது சுகாதாரக் கல்லூரியின் ஆராய்ச்சியின் முதன்மை ஆசிரியர் பாஸ்டியன் லெசாட் ஒரு ஊடகத்தில் தெரிவித்தார்.

“குறிப்பாக உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான சூழலில், தூக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு உடல் நலம் மற்றும் சிகிச்சையில் குறட்டை ஒரு காரணியாக கருதுவதன் முக்கியத்துவத்தை இந்த முடிவுகள் வலியுறுத்துகின்றன.”

உலகளவில் 30-79 வயதுடைய 128 கோடி பெரியவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாகவும், உயர் இரத்த அழுத்தம் உள்ள பெரியவர்களில் 46 சதவீதம் பேர் தங்களுக்கு  உயர் இரத்த அழுத்தம் உள்ளதை  அறியாமல் இருக்கின்றனர் என்றும் உலக சுகாதார நிறுவனம் மதிப்பிடுகிறது.


Pengarang :