NATIONALSUKANKINI

சுக்மா போட்டி- சிலாங்கூர் விளையாட்டாளர்கள் பட்டியல் ஜூலை மாத தொடக்கத்தில் இறுதி செய்யப்படும்

ஷா ஆலம், ஜூன் 26- சரவா மாநிலத்தில் நடைபெறவிருக்கும் மலேசிய விளையாட்டுப் போட்டிகளில் (சுக்மா) பங்கேற்கும் சிலாங்கூர் விளையாட்டாளர்களின் பட்டியல் வரும் ஜூலை மாதம் 5ஆம் தேதிக்கு முன்பாக இறுதி செய்யப்படும் என்று  சிலாங்கூர் விளையாட்டு மன்றத்தின் நிர்வாக இயக்குநர் முகமது நிஸாம் மர்ஜூக்கி கூறினார்.

விளையாட்டாளர்களின் ஆட்டத்திறன் சிறப்பான நிலையில் உள்ளதை உறுதி செய்வதில் அனைத்து விளையாட்டுச் சங்கங்களும் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருவதாக அவர் சொன்னார்.

சுக்மா போட்டியில் பங்கேற்கும் விளையாட்டாளர்கள் பட்டியல் நம்மிடம் உள்ளது. எனினும், ஒலிம்பிக் உள்ளிட்ட இதரப் போட்டிகளில் பங்கேற்கவிருக்கும் காரணத்தால் அவர்களில் சிலரை சரவா சுக்மா போட்டிக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

ஆகவே, விளையாட்டாளர்களின் பட்டியலை விளையாட்டுச் சங்கங்கள் எங்களிடம் அனுப்பும். வரும் ஜூலை 5ஆம் தேதிக்கு முன்பாக இறுதிப் பட்டியலை நாங்கள் தயார் செய்வோம். அனைத்து விளையாட்டாளர்களும் தற்போது தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களின் உடலாரோக்கியம் மீது நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம் என்று சிலாங்கூர் கினியிடம் அவர் சொன்னார்.

ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த 21வது சுக்மா போட்டியை சரவா மாநிலம் இம்முறை ஏற்று நடத்துகிறது. இப்போட்டி வரும்  ஆகஸ்டு 17 முதல் 24 வரை நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் 61 தங்கப்பதக்கங்களைப் பெறுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ள சிலாங்கூர், முதல் மூன்று இடங்களில் ஒன்றைப் பெறவும் திட்டமிட்டுள்ளது.


Pengarang :