MEDIA STATEMENT

குழந்தைகளை உறங்க வைக்க மருந்து- அனுதாபத்தைப் பெற பிச்சைக்காரர்களின் தந்திரம்

கோலாலம்பூர், ஜூன் 26- இங்குள்ள ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷாவில் நேற்று குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட சோதனையின் வழி மாநகரில் அந்நிய நாட்டினர் மற்றும் குழந்தைகளைப் பயன்படுத்தி பிச்சையெடுக்கும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது.

பத்து மாதம் முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு மருந்து கொடுத்து உறங்க வைத்தப் பின்னர் அவர்களை பெரியவர்களிடம் கொடுத்து பிச்சையெடுக்க ஜாலான் சௌகிட், ஜாலான் மஸ்ஜிட் இந்தியா, ஜாலான் செந்துல் போன்ற பகுதிகளுக்கு அனுப்புவது இதில் வேதனையளிக்கும் விஷயமாக உள்ளது.

இத்தகையச் செயல்களின் மூலம் மக்களின் அனுதாபத்தைப் பெற்று மேலும் அதிகமான வருமானத்தை ஈட்டுவது அக்கும்பலின் நோக்கமாக இருந்துள்ளது.

நேற்றிரவு 9.00 மணியளவில் நான்கு மாடி கடை வீடொன்றில் குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் இந்த படுபாதகச் செயல் அம்பலத்திற்கு வந்தது. அந்நிய நாட்டினர் வசித்து வரும் அந்த குடியிருப்பில் இருமல் போத்தல்களை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

அந்நிய நாட்டினரின் குடியிருப்பாக விளங்கும் வரும் அந்த கட்டிடத்தில் பாகிஸ்தான், இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மாதம் 800 வெள்ளி வாடகையில் தங்கியுள்ளனர். ஒவ்வொரு அறையிலும் சிறார்கள் உள்பட எண்மர் வரை குடியிருந்துள்ளது இச்சோதனை வழி தெரிய வந்தது.

அதோடு மட்டுமின்றி சலவை நிலையம், முடிதிருத்தும் மையம், தொலைத் தொடர்பு சாதனை விற்பனை நிலையத்தை நடத்தும் போர்வையில் போலி கடப்பிதழ்களைத் தயாரிக்கும் கும்பல்களின் நடவடிக்கையும் இச்சோதனை நடவடிக்கையில் அம்பலத்திற்கு வந்தது.

கடந்த ஆறு மாத காலமாக மேற்கொள்ளப்பட்ட உளவு நடவடிக்கையின் எதிரொலியாக நேற்று இந்த அதிரச் சோதனை நடத்தப்பட்டதாக கோலாலம்பூர் குடிநுழைவுத் துறையின் இயக்குநர் வான் முகமது சௌபி வான் யூசுப் கூறினார்.

இச்சோதனை நடவடிக்கையில் 10 மாதம் முதல் 59 வயது வரையிலான 79 அந்நிய நாட்டினர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :