SELANGOR

பேங்க் ராக்யாட் இந்தியர் தொழில்முனைவோர் நிதி ஒதுக்கீடு ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுமையாகப் பயன்படுத்தப்படும்

கோலாலம்பூர், ஜூன் 29 குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (எம்எஸ்எம்இ) இலக்காகக் கொண்ட பேங்க் ராக்யாட் இந்தியர் தொழில்முனைவோர் நிதியளிப்பு-i (BRIEF-i) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் RM50 மில்லியன் ஒதுக்கீடு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப் படுவதாகத் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் டத்தோ ஆர். ரமணன் கூறினார்.

இத்திட்டம் ஜூன் 5 ஆம் தேதி தொடங்கப்பட்டதிலிருந்து 10 சதவீத நிதி தொழில் முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

“ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில், நாங்கள் இந்த RM50 மில்லியனை முடித்துவிடுவோம். ஏனெனில், 15 நாட்களில், நாங்கள் ஏற்கனவே 10 சதவீதத் தொகையை அடைந்துவிட்டோம்,” என்று நிதியளிப்பு திட்டத்திற்கான காசோலைகளை பெறுநர்களுக்கு வழங்கிய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

பேங்க் ராக்யாட் உடன் இணைந்து, நிதியுதவிக்காக 43 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு மொத்தம் RM3.8 மில்லியன் ஆகும். மேலும் RM 5.7 மில்லியன் பெறுமானமுள்ள 135 விண்ணப்பங்கள் அடுத்த கட்ட செயலுக்கு வரவுள்ளது.

“இந்தியர் தொழில்முனைவோர் தங்கள் வணிக இலக்குகளை அடைய உதவுவதில் அரசாங்கம் மற்றும் பேங்க் ரக்யாட் போன்ற நிதி நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்கது” என்று அவர் கூறினார்.

ஹலால் சான்றிதழின் தேவை, விண்ணப்ப செயல்முறையை சிக்கலாக்கும் என்ற புகார்களில், சான்றிதழின்றி உணவு மற்றும் பானங்கள் துறையில் ஈடுபட்டுள்ள இந்திய தொழில் முனைவோர் தபோங் எகோனோமி கும்புலன் உசாஹா நியாகாவுக்கு பரிந்துரைக்கப் படுவார்கள் என்று ரமணன் கூறினார்.

இத்திட்டம் இந்திய தொழில் முனைவோருக்கு அவர்களின் செயல்பாட்டு மூலதனத்திற்கு உதவவும்.  அவர்கள் தங்கள் வணிகங்களை விரிவுபடுத்தும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நிதியுதவிக்கான விண்ணப்ப நடைமுறை நேரடியானது என்றும், இரண்டு நாட்களில் அவரது விண்ணப்பம் அங்கீகரிக்கப் பட்டதாகவும் கஸ்தூரி எண்டர்பிரைஸ் கறி தொழிற்சாலை உரிமையாளர் ஜே. ஜெயந்தரன் (47) கூறினார்.

“ஹலால் சான்றிதழ் உள்ளிட்ட எனது ஆவணங்களை கிளந்தான், கோத்தா பாருவில் உள்ள பேங்க் ரக்யாட் கிளைக்குக் கொண்டு வந்தேன் மற்றும் RM600,000 நிதியுதவி பெற்றேன். இது எனது வணிகத்தை விரிவுபடுத்த உதவும்,” என்று அவர் கூறினார்.

மேலும், இத்திட்டத்தின் மூலம் RM220,000 பெற்ற ஆடை மொத்த விற்பனையாளர் கே. வள்ளியம்மா (49), அதற்கான அனுமதி பெற மூன்று நாட்கள் மட்டுமே ஆனது என்றார்.

– பெர்னாமா


Pengarang :