ECONOMYMEDIA STATEMENT

ரோன்95  பெட்ரோல்  மானிய மறுசீரமைப்பு குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை- பிரதமர்

ஜோர்ஜ் டவுன், ஜூன் 30 – ரோன் 95 பெட்ரோலுக்கான மானியத்தை மறுசீரமைப்பு  செய்வது தொடர்பில் அரசாங்கம் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லியின் அண்மைய  அறிக்கை,   இலக்கு டீசல் மானியம் மீது முதன்மையாக கவனம் செலுத்தியதாக  அவர் கூறினார். அத்திட்டத்தை  ஆக்ககரமான முறையில் அமல் செய்வது குறித்து அரசாங்கம் ஆய்வு செய்து வருவதோடு அத்திட்டத்தால் பொதுமக்கள் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் மானிய உதவிக்கு முறையிடலாம் என்றும்  தெரிவித்திருந்தார்.

நான் ரபிஸியின் உரையைப் படித்தேன். கவனமாக பரிசீலிக்க வேண்டிய   டீசல் மானியத்தில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.  யாரேனும் தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தால் அவர்கள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் என்று அன்வார் சொன்னார்.

நேற்று  பினாங்கு உள்நாட்டு வருமான வரி வாரிய (ஐ.ஆர்பி.) கட்டிடத்தில்  நிருபர்களை சந்தித்த போது அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த வியாழக்கிழமை  சீனாவின் டேலியனில் நடைபெற்ற உலகப் பொருளாதார ஆய்வரங்கின்போது  புளும்பெர்க் செய்தி  நிறுவனத்திற்கு  ரபிஸி அளித்த நேர்காணல் தொடர்பில் அன்வார் இவ்வாறு விளக்கமளித்தார்.

ஒட்டு மொத்த டீசல் மானியம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து  ‘பெட்ரோல் ஆச்சரியம்’ காத்திருப்பதாக ரபிஸி அப்பேட்டியில்  நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில், கிளந்தானில் உள்ள நெங்கிரி மாநிலத் தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து வினவப்பட்ட போது, ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் இது  குறித்து விவாதிக்கும் என்று அன்வார் கூறினார்.

நெங்கிரி! அது பற்றி அவர்கள் விவாதிக்கட்டும்  என்று சுருக்கமாக பதிலளித்தார்.


Pengarang :