ECONOMYMEDIA STATEMENT

ஜோகூர் துங்கு மக்கோத்தாவைத் தொடர்புபடுத்தும் முகநூல் பதிவு தொடர்பில் போலீஸ் விசாரணை

ஜோகூர் பாரு, ஜூன் 30- நபர் ஒருவர் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டில் ஜோகூர் ரீஜண்ட் துங்கு மக்கோத்தா இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிமை தொடர்பு படுத்தி பாஸ் மலேசியா ஆதரவாளர் கிளப் முகநூல் பக்கத்தில் வெளியானச் செய்தி தொடர்பில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சட்டவிரோத பணபரிவர்த்தனைப் பிரிவின் இயக்குநர் டத்தோ முகமது ஜாம்ரி ஜைனால் அபிடின் கடந்தாண்டு ஜனவரி 28ஆம் தேதி கட்டார் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடமிருந்து 2 கோடி வெள்ளியை கையூட்டாக கேட்டார் என்று துங்கு மக்கோத்தா கூறியதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் எம். குமார் கூறினார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கோத்தா திங்கி, பண்டார் பெனாவார் போலீஸ் நிலையத்தில் நேற்று மாலை 4.05 மணியளவில் புகார் செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

இந்த புகார் தொடர்பில் புக்கிட் அமான் குற்றவியல் விசாரணைப் பிரிவின் புரோசிகியூஷன்/சட்டப் பிரிவு, வகைப்படுத்தப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவு ஆகியவை 1948ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டத்தின் 4(1)வது பிரிவு மற்றும் 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்டகச் சட்டத்தின் 233வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தி வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த வழக்கு இன்னும் விசாரணையில் இருந்து வருவதாகக் கூறிய அவர், பொது மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதோடு சமூக ஊடகத்தினரும் அந்த தளத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தினார்.

பொது ஒழுங்கு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய நிந்தனை, அவதூறு மற்றும் பொய்யான செய்திகளை வெளியிடும் மற்றும் பகிரும் தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். 

 


Pengarang :