ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கெந்திங் விபத்து- பேருந்து  ஓட்டுநருக்கு நான்கு நாள் தடுப்புக் காவல்

குவாந்தான், ஜூன் 30 – கெந்திங் ஹைலேண்ட்ஸில் இருந்து இறங்கும் வழியில்  நிகழ்ந்த சாலை  விபத்தில்  இரண்டு சீனப் பிரஜைகள் உயிரைப் பறித்த  சுற்றுலாப் பேருந்தின் ஓட்டுநர் விசாரணைக்காக  நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பெந்தோங் மாவட்ட காவல் நிலையத் தலைமையகத்தில் நேற்றிரவு 10.30 மணியளவில் கைது செய்யப்பட்ட முப்பத்திரண்டு வயதான அந்த ஓட்டுநர், விசாரணைக்கு உதவுவதற்காக இன்று  காலை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாக பெந்தோங் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன்  சைஹாம் முகமது கஹார் தெரிவித்தார்.

அந்த பேருந்து ஓட்டுநரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதோடு பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக அவருக்கு  இதற்கு முன்பு 27 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நேற்று காலை 11.00  மணியளவில், ஜாலான் தூருன் கெந்திங் ஹைலேண்ட்ஸின் 16.5 கிலோ மீட்டரில் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து  சாலைத் தடுப்பை   மோதி கவிழந்ததில் இரண்டு சீனப் பிரஜைகள் உயிரிழந்ததோடு மேலும் பலர் காயமடைந்தனர்.


Pengarang :