ECONOMYSELANGOR

பத்தாங் காலி-கெந்திங் சாலை போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது- 10,000 பேர் பயனடைவர்

உலு சிலாங்கூர், ஜூலை 2- பாதர்‘ஸ் ஆர்கானிக் ஃபார்ம் பொழுதுபோக்கு முகாம் அருகே சுமார் ஈராண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட தடம் பி66 ஜாலான் பத்தாங் காலி-கெந்திங் சாலை நேற்று மீண்டும் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது.

சுமார் 1 கோடியே 90 லட்சம் வெள்ளி செலவில் இந்த சாலை சீரமைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அடிப்படை வசதிகள் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம், ‘தெர்ராலிங்க் வால் சிஸ்டம்‘ எனும் முறையின் கீழ் இப்பகுதியில் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இப்பகுதியில் உள்ள 25 மீட்டர் உயர மலைச்சரிவை சீரமைக்க இந்த முறை மிகவும் பொருத்தமானதாக விளங்குவதை பொதுப்பணித்துறை கண்டறிந்துள்ளதோடு சிலாங்கூரில் முதன் முறையாகப் பயன்படுத்தப்பட்ட திட்டமாகவும் இது விளங்குகிறது என்று அவர் சொன்னார்.

இந்த சாலையின் பிரதானப் பணிகள் முற்றுப் பெற்று போக்குவரத்து நேற்று திறக்கப்பட்டது. இச்சாலை திறக்கப்பட்டதன் வழி சுமார் 10,000 பேர் பயன் பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது. அப்பகுதியில் புற்களைப் பதிக்கும் பணி மட்டுமே இன்னும் பாக்கி உள்ளது. அதுவும் இரண்டு வாரங்களில் முற்றுப் பெற்று விடும் என செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

பாதர்‘ஸ் ஆர்கானிக் ஃபார்ம் பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி நிகழ்ந்த நிலச்சரிவில் 31 பேர் உயிரிழந்ததோடு மேலும் 61 பேர் உயிர்த்தப்பினர். 

இச்சம்பவத்தைத் தொடர்ந்து பத்தாங் காலி- கெந்திங் சாலை போக்குவரத்துக்கு மூடப்பட்டது.  அச்சாலை கடந்த ஜனவரி தொடங்கி இலகு ரக வாகனங்களுக்கு திறக்கப்படும் என்று மந்திரி  புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாகக் கூறியிருந்தார்.

 


Pengarang :