ECONOMYNATIONAL

சவுஜானா புத்ரா மேம்பாலம் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்துக்குத் திறக்கப்படும்

உலு சிலாங்கூர், ஜூலை 2- போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்ட 820 மீட்டர் நீளம் கொண்ட சவுஜானா புத்ரா மேம்பாலம் வரும் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்துக்கு திறக்கப்படும்.

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் மத்திய சுற்றுச்சாலை (இலிட்) மற்றும் தென் கிள்ளான் நெடுஞ்சாலை (எஸ்.கே.வி.இ.) ஆகியவற்றை இணைக்கும் இந்த மேம்பாலத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி திறந்து வைப்பார் என்று அடிப்படை வசதிகள் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

அந்த மேம்பாலத்தில் இறுதிக்கட்ட நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. அனைத்தும் நல்ல நிலையில் உள்ளதோடு வரும் ஜூலை 7ஆம் தேதி அப்பாலம் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்று அவர் சொன்னார்.

நேற்று இங்கு பத்தாங் காலி- கெந்திங் சாலையை மீண்டும் போக்குவரத்துக்கு திறந்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சுற்றுவட்டாரத்தில் நிலவும் கடுமையான போக்குவரத்துச் நெரிசல் பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கிலான இந்த மேம்பாலம் 6 கோடி வெள்ளி செலவில் நிர்மாணிக்கப் பட்டதாக மந்திரி புசார் முன்னதாக கூறியிருந்தார்.

பண்டார் சவுஜானா புத்ரா வழியாக எஸ்.கே.வி.இ. மற்றும் இலிட் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடிய சுமார் 65,000 வாகனமோட்டிகளுக்கு இந்த மேம்பாலம் மிகுந்த பயனைத் தரும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். 


Pengarang :