ECONOMY

இன்று ஐந்து இடங்களில் மலிவு விற்பனை- பொதுமக்கள் பங்கேற்று பயனடைய மந்திரி புசார் வேண்டுகோள்

ஷா ஆலம், ஜூலை 6-  சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டு கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டில் இன்று ஐந்து இடங்களில் நடைபெறும்  ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனையில் பங்கேற்று பயனடையுமாறு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த விற்பனைத் திட்டத்தின் வாயிலாக வெளி சந்தைகளைக் காட்டிலும் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்குரிய வாய்ப்பை மாநில அரசு பொது மக்களுக்கு வழங்குவதாக அவர் சொன்னார்.

இந்த ஏஹ்சான் ரஹ்மா விற்பனையின் வாயிலாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை குறைந்த விலையில் வாங்குவதற்குரிய வாய்ப்பு கிட்டுகிறது. கீழ்க்கண்ட இடங்களில் இன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும் விற்பனையில் பங்கு கொண்டு பயன் பெறுங்கள் என்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கேட்டுக் கொண்டார்.

காஜாங் தொகுதி மக்கள் சேவை மையம், கம்போங் சுங்கை கூலாங் கூலாங் கிராம மையம் (பெர்மாத்தாங் தொகுதி), பண்டார் தாசேக் புத்ரி பெர்ச்பூட் கோர்ட் (குவாங் தொகுதி), தாமான் டேசா விஸ்தா (சுங்கை பீலேக் தொகுதி), கம்போங் 14, க்யா ஹாஜி அப்துல்லா ஓமார் பள்ளிவாசல் வளாகம் (செமெந்தா தொகுதி) ஆகிய இடங்களில் இந்த மலிவு விற்பனை நடைபெறுகிறது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும்,  ஒரு தட்டு பி கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும், இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும், கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும், 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும், 5 கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

.இந்த மலிவு விற்பனைத் திட்டத்திற்கு மாநில அரசு இதுவரை நான்கு கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் மூவாயிரம் இடங்களில் நடைபெற்ற இந்த மலிவு விற்பனைகளின் வாயிலாக இதுவரை ஐம்பது லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

கடந்தாண்டு நோன்புப் பெருநாளின் போது மலிவான விலையில் கோழி மற்றும் முட்டையை மிக அதிகமான எண்ணிக்கையில் விற்பனை செய்ததற்காக பி.கே.பி.எஸ். மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது.

ஏஹ்சான்  ரஹ்மா மலிவு விற்பனை தொடர்பான விபரங்களை பி.கே.பி.எஸ். அகப்பக்கம் மூலமாகவும் போஸ்டரில் இடம் பெற்றுள்ள கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாகவும் அல்லது http://linktr.ee/myPKPS  என்ற அகப்பக்கத்தின் மூலமாகவும்  அறிந்து கொள்ளலாம்.


Pengarang :