HEALTHMEDIA STATEMENT

மாநில அரசின் இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்திற்கு பொது மக்கள் பாராட்டு

சுபாங் ஜெயா, ஜூலை 6- இன்று இங்குள்ள பண்டார் பாரு சுங்கை பூலோ, டேவான் மெராந்தி எம்பிஎஸ்ஏ மண்டபத்தில்   மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த இலவச மருத்துவ பரிசோதனை நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மாநில அரசு ஏற்பாடு செய்யும்  இலவச  திட்டங்களின் பலன்களை மக்கள் அனுபவிப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த  சிலாங்கூர் சாரிங் திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக பாயா ஜெராஸ் மாநில சட்டமன்ற ஒருங்கிணைப்பு  அரசியல் செயலாளர் முகமது முகமட் இசா கூறினார்.

இத்திட்டத்தின் மூலம் இருதயம், சிறுநீரகம், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், கண்கள், காதுகள் மற்றும் பற்கள் போன்ற பல்வேறு உடல்நலப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

இந்த திட்டத்தை டிக்டாக் உட்பட பல்வேறு சமூக  ஊடகங்கள் மூலம் நாங்கள் விளம்பரப்படுத்தினோம். வயது வேறுபாடின்றி  சுகாதார பரிசோதனைகளின் முக்கியத்துவத்தை மக்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறோம் என்று அவர் நிகழ்ச்சியில் சந்தித்தபோது கூறினார்.

இதனிடையே,  ஒருவரின் உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதை உறுதிசெய்ய உதவும் என்பதால்  இந்த இலவச மருத்துவப் பரிசோதனைத்  திட்டம் மிகவும் பயனானது என்று லீ அஹ் லான் (வயது 67)  என்ற மூதாட்டி  விவரித்தார்.

மூன்று நாட்களுக்கு முன் இந்த திட்டம் குறித்து அறிந்து  என் பிள்ளைகள் மற்றும் கணவருடனும் வர முடிவெடுத்தேன். பல இடங்களுக்குச் சென்று நேரத்தை செலவிட வேண்டியதில்லை என்பதால் இந்த திட்டம் சிறப்பானது என்றார் அவர்.

கடைசியாக நான் கோவிட் -19 நோய்ப்பரவலுக்கு  முன்பு மருத்துவப்  சோதனைக்குச் சென்றேன். இந்த திட்டம் குறித்து அறிந்த போது வாய்ப்பை இழக்க விரும்பவில்லை. ஏனெனில் எனது சொந்த ஆரோக்கியத்தை பரிசோதிக்க முடிந்ததோடு மருத்துவச் செலவுகளையும் மிச்சப்படுத்த முடித்தது என்று அவர் தெரிவித்தார்.

மக்களுக்கு பலன்களை வழங்கும் இதுபோன்ற திட்டத்தை நழுவ விடக் கூடாது என்று   68 வயதான அட்னான் ஷாரிப் தெரிவித்தார். இத்தகையத் திட்டம்  நமது சொந்த நலனுக்கானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இப்போதெல்லாம் பலர் தங்கள் ஆரோக்கியத்தை பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. மேலும் உடல் நிலை குறித்து  தெரியாதபோது தாங்கள் ஆரோக்கியமாக இருப்பதாக நினைத்து பரிசோதனை செய்ய விரும்பவில்லை.

முதியோர்கள்  மட்டுமல்ல இளைஞர்களும் தங்கள் உடல்நிலையைத் தெரிந்துகொள்ள இப்பரிசோதனையைச்  செய்ய வேண்டும். இதன் மூலம்  அவர்கள் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று அவர் சொன்னார்.


Pengarang :