MEDIA STATEMENTNATIONAL

போலீஸ்காரர்கள் போல் நடித்து ஆடவரிடம் வெ.80,000 கொள்ளை- 10 பேர் கொண்ட கும்பலின் அட்டூழியம்

கோத்தா பாரு, ஜூலை 9- போலீஸ்காரர்கள் என தங்களைக் அடையாளம் கூறிக் கொண்டு ஆடவரிடம் கொள்ளையிட்ட  பத்து பேர் கொண்ட கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் கோல கிராய், கம்போங் லெப்பான் அஞ்சோங்கில் உள்ள தர்ப்பூசணி தோட்டத்தில் அமைந்துள்ள குடிலில் நேற்று விடியற்காலை 2.40 மணியளவில் நிகழ்ந்ததாக கோல கிராய் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன்  மஸ்லான் மாமாட் கூறினார்.

அந்த குடிலில் தங்கியிருந்த அதன் உரிமையாளரான அந்த ஆடவரை அணுகிய முகமூடி அணிந்த அக்கும்பல் தங்களை போலீஸ்காரர்கள் என அடையாளம் கூறிக் கொண்டதாக அவர் சொன்னார். 

 துப்பாக்கி போன்ற ஆயுதத்தைக் காட்டியதோடு பாராங் கத்தியையும் அவரது கழுத்தி வைத்த அக்கும்பல் குற்றச் செயலில் ஈடுபட்டதற்காக அவரை கைது செய்யப் போவதாக மிரட்டியதோடு அவ்வாடவரின் கை மற்றும் கால்களை கயிற்றால் கட்டியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

பின்னர் அந்த ஆடவரின் வசமிருந்து 7,000 வெள்ளி ரொக்கம், ஒரு விவேக கைப்பேசி, டோயோட்டா ஹைலக்ஸ் வாகனம், மரம் அறுக்கும்  இயந்திரம், மின்சார் சைக்கிள், இரு ராடோ ரக கைக்கடிகாரங்கள் ஆகியவைற்றையும் அக்கும்பல் பறித்துச் சென்றது என்றார் அவர்.

இந்த  கொள்ளைச் சம்பவம் தொடர்பில் நாற்பது வயதான அந்த ஆடவர் அதிகாலை 4.24 மணியளவில் போலீசில் புகார் செய்ததாகக் கூறிய அவர், இந்த சம்பவத்தில் ஏற்பட்ட இழப்பு சுமார் 80,000 வெள்ளியாகும் என்றார்.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 395/397வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். 


Pengarang :