MEDIA STATEMENTNATIONAL

இணைய பகடிவதைக்குத்  தீர்வு காண தெளிவானச் சட்டங்கள் தேவை- ஐ.ஜி.பி. கருத்து

கோலாலம்பூர், ஜூலை 14- இணைய பகடிவதைப் பிரச்சினையை ஆக்ககரமான முறையில்  கட்டுப்படுத்த அரச மலேசிய போலீஸ் படைக்கு தெளிவானச் சட்டங்கள் தேவை என்று தேசிய போலீஸ் படைத் தலைவர்  டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் கூறினார்.

இதுபோன்ற புகார்களைக் கையாள நடப்பிலுள்ள  தண்டனைச் சட்டம்  மற்றும் 1998ஆம் ஆண்டு  தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்ட விதிகளைக் காவல் துறை பயன்படுத்த வேண்டியுள்ளது என்று அவர் சொன்னார்.

மிரட்டி பணம் பறித்தல் மற்றும் அச்சுறுத்தல் சம்பந்தப்பட்ட புகார்கள்  குற்றவியல் சட்டத்தின் கீழும்   இழிவுபடுத்தக்கூடிய   மற்றும் புண்படுத்தும் கருத்துக்கள்  தொடர்பான புகார்கள் 1998ஆம் ஆண்டு  தொடர்பு மற்றும்   பல்லூடகச் சட்டத்தின்  கீழும்  விசாரிக்கப்படுகின்றன  என்று அவர் தெரிவித்தார்.

இச்சூழலில்,  இணையவழி மிரட்டல் தொடர்பான தெளிவான சட்டத்தின் அவசியம் குறித்து விவாதிக்க தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி பாட்சிலை தாங்கள் சந்தித்ததாக ரஸாருடின்  அவர் கூறினார்.

இவ்விவகாரம்  தொடர்பில் விரிவாக கலந்துரையாடுவதற்கு  குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை ஆகியவற்றின் அதிகாரிகளும்    இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.
.
சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும்  இணைய பகடிவதை அச்சுறுத்தலைக் கையாள்வதற்கு ஏதுவாக குற்றவியல் சட்டம்,  மற்றும் தகவல் 1998ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடகச் சட்டம் மற்றும்    அதனுடன் தொடர்புடைய பிற சட்டங்களை தகவல் தொடர்பு அமைச்சு மறு ஆய்வு செய்யும் என்று ஃபாஹ்மி நேற்று முன்தினம்  கூறியிருந்தார்.

இணைய பகடிவதை தொடர்பானப் புகார்களைக் கையாள பிரத்தியேகச் சட்டத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அரசாங்கம் ஆராயும் என்றார் அவர்.


Pengarang :