MEDIA STATEMENT

அல்-மவாஸி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்- பிரதமர் கண்டனம்

செர்டாங், ஜூலை 14-  பெண்கள், சிறார்கள் உள்ளிட்ட பொதுமக்களின் உயிரைப் பறித்த அல்-மவாஸி அகதிகள் முகாம் மீதான இஸ்ரேல் இராணுவத்தின் வான்வழித் தாக்குதலுக்கு மலேசியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மனித உரிமைகளை பெரிய நாடுகள் பாதுகாக்கத்   தவறியதன் விளைவாக  இஸ்ரேல் இராணுவத்தால்  தொடரப்படும் தொடர்ச்சியான  காட்டுமிராண்டித்தனமாக  இது விளங்குகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

ஆகவே, காஸா மக்களுக்கு எதிராக ஸியோனிச ஆட்சி நிகழ்த்தி வரும் மனிதாபிமானமற்ற கொடுங்கோன்மையைக் கண்டிப்பதில் மலேசிய அரசாங்கம் வலுவான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது  என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று  இங்கு 2024 ஃபெல்டா குடியேறியேற்றவாசிகள் தினத்தை தொடக்கி வைத்தப்   பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

பாலஸ்தீன மக்களுக்கான பாதுகாப்பான வளையமாக இஸ்ரேலால் பிரகடனப்படுத்தப்பட்ட  பகுதியில் இந்த கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற தாக்குதல் நடத்தப்பட்டதாக  விஸ்மா புத்ரா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது.

இதனிடையே, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதல் குறித்து கேட்டதற்கு, மலேசியா இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டிப்பதாகவும் பிரச்சினைகளுக்கு தாக்குதல் ஒருபோதும் தீர்வாகாது என்றும் அன்வார் கூறினார்.

டோனால்ட் டிரம்பிற்கு அனுதாபம் தெரிவித்துக் கொண்ட நிதியமைச்சருமான அன்வார், அங்கு நிலைமை கட்டுக்குள் இருக்கும் என நம்புவதாகச் சொன்னார்.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த டிரம்ப், அங்கு  நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததாக அனைத்துலக  ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
டிரம்ப் தற்போது நல்ல நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Pengarang :