ECONOMYMEDIA STATEMENT

நூர் ஃபாரா கொலை தொடர்பில்  கைதான சந்தேகப் பேர்வழி ஒரு போலீஸ்காரர்- காவல்துறை உறுதிப்படுத்தியது

சுங்கை பூலோ, ஜூலை 16- உலு சிலாங்கூர், கம்போங் ஸ்ரீ கிளேடாங்கில் நேற்று பிற்பகல் சடலமாக மீட்கப்பட்ட நூர் ஃபாரா கர்த்தினி அப்துல்லா  என்ற பெண்ணின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபர் ஒரு போலீஸ்காரர் என்பதை சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் உறுதிப்படுத்தினார்.

கொலை செய்யப்பட்ட  பெண்ணின் காதலரான அந்த  26 வயதுடைய நபர் பேராக்கில் உள்ள காவல்நிலையத்தில் பணிபுரிபவர் என்று அவர் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் பெர்னாமா இன்று தொடர்பு கொண்டபோது, ​​”ஆம், அவர் காவல்துறை உறுப்பினர்தான்.  பேராக்கில் பணியில் இருக்கிறார் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்” என்று அவர் தெரிவித்தார்.

சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திலேயே அப்பெண்  கொல்லப்பட்டதும்  அழுகத்  தொடங்கிய உடலின் நிலையின் அடிப்படையில் பார்க்கையில்  சில நாட்களுக்கு முன்பு அவர்  இறந்திருக்கலாம் என்பதும் முதற்கட்ட விசாரணையில்  தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து குற்றவியல் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேக நபரை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம்   போலீஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இன்று காலை உலு  சிலாங்கூரில் உள்ள கோல குபு பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி நூருல் மர்தியா முகமது ரெட்சா இந்த தடுப்புக்  காவல் அனுமதியை வழங்கினார்.

நூர் ஃபாரா கர்த்தினி  கடந்த புதன்கிழமை காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில் அவரது உடல் உலு சிலாங்கூர்,  கம்போங் ஸ்ரீ கிளேடாங்கில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் மாலை 6.00 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டதாக ஹுசேன் தெரிவித்தார்.

சரவாக்  மாநிலத்தின் மிரியைச் சேர்ந்த  அப்பெண் உப்சி எனப்படும் சுல்தான் இட்ரிஸ் ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்தின்  முன்னாள் மாணவராவார்.

பேராக் மாநிலத்தின்  தஞ்சோங் மாலிமில் உள்ள வாடகை கார் நிறுவனத்தில் பணிபுரிந்த அவர்,  வாடிக்கையாளரிடம் வாடகைக் காரை ஒப்படைக்கச் சென்ற போது காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, இச்சம்பவம் குறித்து கருத்துரைத்த பேராக் மாநில  காவல்துறைத் தலைவர் டத்தோ அஸிசி மாட் அரிஸ்,   லான்ஸ் கார்ப்ரல் அந்தஸ்தில் உள்ள சந்தேக நபர் ஐந்து ஆண்டுகளாக சிலிம் ரிவர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருவதாகக் கூறினார்.


Pengarang :