MEDIA STATEMENTNATIONAL

ஆறு வயதுச் சிறுவன் சித்திரவதை- ஆசிரியர்  கைது

கோலாலம்பூர், ஜூலை 19 – ஆறு வயது சிறுவனை  அடித்து துன்புறுத்திய சந்தேகத்தின் பேரில்  ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தனது மகன்  தாக்கப்பட்டது தொடர்பில்   36 வயது நபரிடமிருந்து புகார் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து  சந்தேக நபரான அந்த 36 வயது  ஆசிரியர் நேற்று பிற்பகல் 1.13 மணியளவில் அம்பாங்கில் கைது செய்யப்பட்டதாக  பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஷாருல்நிஸாம் ஜாபர் கூறினார்.

இந்தச் சம்பவம் கிளானா ஜெயாவில் உள்ள ஒரு சிறார் பராமரிப்பு மையத்தில் நிகழ்ந்தது. அச்சிறுவன் நாற்காலியிலிருந்து கீழே விழும் வரை சந்தேக நபர் அவனை கொடூரமாக உதைத்து, தாக்கி, இழுத்துச் சென்றது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என அவர் சொன்னார்.

பாதிக்கப்பட்டச் சிறுவனின் கைகளில் கடிபட்டதற்கான அடையாளங்கள் இருந்தன. அச்சிறுவன் ஆட்டிஸம் எனப்படும் மன இறுக்க குறைபாடு கொண்டவர். அந்த சிறார் பராமரிப்பு மையத்தில் ஆசிரியராக பணிபுரியும்  அந்நபர், விசாரணைக்கு  கைது செய்யப்பட்டுள்ளார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

2001ஆம் சிறார் சட்டத்தின்  31(1)(ஏ) பிரிவின் கீழ் இந்த சம்பவம் விசாரிக்கப்பட்டு வருவதாக ஷாருல்நிஸாம் கூறினார்.


Pengarang :