ANTARABANGSAECONOMY

ரஷ்ய அதிபரை பிரதமர் அன்வார் சந்திக்கிறார்- பொருளாதார ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பார்

பெட்டாலிங் ஜெயா, ஆக 2 – மலேசியா-ரஷ்யா இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதினை அடுத்த சில வாரங்களில் விளாடிவோஸ்டாக்கில் சந்திக்கவிருக்கிறார்.

பிரதமர் புதினின் அழைப்பை  ஏற்று பொருளாதார ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பதற்காக   சில வாரங்களில் நான் ரஷ்யாவில் உள்ள விளாடிவோஸ்டாக் செல்லவிருக்கிறேன். யாருடனும் விரோதம் பாராட்டாமல்  சுதந்திரமான நிலையைப் பாதுகாக்கும்  நாடு என்ற எங்களின் நிலைப்பாட்டு இச்சந்திப்பில்  நிலைநிறுத்துவேன் என்று அவர் கூறினார்.

இன்று இங்கு ஜிஎக்ஸ் வங்கியின்  தலைமையகம் மற்றும் அதன் திறன் மேம்பாட்டு மையத்தை திறந்து வைத்து உரையாற்றுகையில்  அவர் இவ்வாறு கூறினார்.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பிரதமர் அன்வாரை  புத்ராஜெயாவில் உள்ள ஸ்ரீ பெர்டானாவில்  கடந்த ஜூலை 28ஆம் தேதி மரியாதை நிமித்தம் சந்தித்தார்.  ரஷ்யா தற்போதைய பிரிக்ஸ் அமைப்பின் தலைவராக இருப்பதால் அரசுகளுக்கிடையேயான அமைப்பில்   சேர்வது தொடர்பான மலேசியாவின் விருப்பம் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, பாதுகாப்பு, உயர்கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மலேசியா-ரஷ்யா ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.


Pengarang :