SELANGORSELANGOR

லைசென்ஸ் இன்றி கார் ஓட்டிய சம்பவம்- தந்தை-மகன் நீதிமன்றத்தில்  குற்றஞ்சாட்டப்படுவர்

சிப்பாங், ஆக 3- பூச்சோங், தாமான் புத்ரா இம்பியானில் சிறுவன் ஒருவன்  தன் இரு சகோதரர்களை காரில் ஏற்றிக் கொண்டு பயணித்த சம்பவம்  தொடர்பில் அச்சிறுவன் மற்றும் அவரது தந்தை மீது காவல் துறையினர்  நீதிமன்றத்தில் குற்றஞ் சாட்டியுள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டத் துறை துணைத்  தலைவர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக சிப்பாங் மாவட்ட  போலீஸ் தலைவர் ஏசிபி வான் கமாருள் அஸ்ரான் வான் யூசுப் கூறினார்.  அந்த 12 வயது சிறுவனுக்கு எதிராக 1987ஆம் ஆண்டு சாலை  போக்குவரத்துச் சட்டத்தின் 39(1)வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்படும்.
 

1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 39(5) பிரிவின் கீழ்  தண்டனை வழங்க இச்சட்டப் பிரிவு வகை செய்கிறது என்று அவர்  சொன்னார்.

 
அதே சமயம், அச்சிறுவனின் தந்தை 1987ஆம் ஆண்டு சாலை   போக்குவரத்துச் சட்டத்தின் 39(5)வது பிரிவின் கீழ் குற்றஞ் சாட்டப்படுவார்  என்று அவர் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.  இந்த சட்டப் பிரிவின் கீழ் குற்றவாளி என நிரூபிக்க படுவோருக்கு 2,000  வெள்ளிக்கும் மேற்போகாத அபராதம் அல்லது ஆறு மாதச் சிறை அல்லது  இரண்டுமே விதிக்கப்படும்.  
 

அந்த பன்னிரண்டு வயது சிறுவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு  எட்டு மணியளவில் ஆறு மற்றும் நான்கு வயதுடைய தன் இரு  சகோதரர்களுடன் பெரேடுவா வீவா காரில் அந்த குடியிருப்பு பகுதியை  வலம் வரும் காட்சி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

 

வீட்டின் அருகில் இருந்த வேகக் கட்டுப்பாட்டு மேட்டை வேகமாக கடந்த   அந்த காரை பெண்மணி ஒருவர் தடுத்து நிறுத்தும் காட்சி அந்த  காணொளியில் பதிவாகியிருந்தது.  அச்சிறுவன் செலுத்திய அக்கார் அந்த பகுதியை பல முறை கடந்ததாகவும்
இதன் தொடர்பில் தாம் காவல்துறையில் புகார் செய்யவுள்ளதாகவும்  அந்த பெண் கூறியிருந்தார்
 

இச்சம்பவம் தொடர்பில் ஐம்பத்து மூன்று வயதுடைய அச்சிறுவனின்  தந்தை வாக்குமூலம் அளிப்பதற்காக 11.30 மணியளவில் சிப்பாங் மாவட்ட   போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்து விசாரணை மற்றும்  அமலாக்கப் பிரிவுக்கு வந்ததாக வான் கமாருள் அஸ்ரான் வான் யூசுப்  முன்னதாக கூறியிருந்தார்.

Pengarang :