SELANGOR

நூற்றுக்கும் மேற்பட் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலை வாய்ப்பு விழா- ஆண்டு இறுதியில் நடைபெறும்

ஷா ஆலம், ஆக 5- நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலை வாய்ப்பு விழா ஷா ஆலம் மாநாட்டு  மையத்தில் ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளது.
பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை வழங்கும் இந்த விழா மூலம் தங்கள் தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பினைப் பெறுவதற்குரிய வாய்ப்பினை பொது மக்கள் பெற இயலும் என்று மனிதவளத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.
வேலை இல்லாதவர்கள் அல்லது புதிய வேலையின் மூலம் தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள விரும்புவோருக்கு உதவும் நோக்கில் மாநில அரசு முன்னெடுத்துள்ள திட்டமாக இது விளங்குகிறது. இந்நோக்கத்தின் அடிப்படையில் ஈராண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட ஜோப்கேர் எனும் இத்திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்கு நடைபெற்ற பைக்கேர்-1000 எனும் திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கும் நிகழ்வுக்கு தலைமை தாங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு சொன்னார்.
சிறு வியாபாரிகளுக்கு வர்த்தக உபகரணங்களை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு கடந்த 2008ஆம் ஆண்டு 20 லட்சம் வெள்ளி நிதிஒதுக்கீட்டில் புளுபிரிண்ட் திட்டம் ஆரம்பிக்கபட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சிறு வர்த்தகர்களுக்கு உதவும் நோக்கிலான இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 20 லட்சம் வெள்ளிக்கும் மேற்பட்டத் தொகை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
மேலும் அதிகமானோர் பயன் பெறுவதற்கு ஏதுவாக எதிர்காலத்தில் இந்த திட்டத்திற்கான மானியத்தை அதிகரிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கத்தால் வேலை இழந்த குறைந்த, நடுத்தர மற்றும் உயர்திறன் கொண்ட தொழிலாளர்களுக்கு உதவும் நோக்கில் மாநில அரசு இந்த ஜோப்கேர் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

Pengarang :