MEDIA STATEMENT

வாழ்க்கைச் செலவின அதிகரிப்பைச் சமாளிப்பதில்  மலிவு விற்பனை பேருதவி- பிரகாஷ் கூறுகிறார்

செய்தி. ஆர்.ராஜா

ஷா ஆலம், ஆக. 9- வாழ்க்கைச் செலவின அதிகரிப்பால் பாதிக்கபட்ட மாநில மக்களுக்கு குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு உதவுவதில் மாநில அரசின் ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை பெரிதும் உதவி புரிவதாக கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ் கூறினார்.

சந்தையை விட 30 விழுக்காடு குறைவான விலையில் அத்தியாவசிய உணவுப் பொருள்களை வாங்குவதற்குரிய வாய்ப்பினை வழங்கும் இத்திட்ட அமலாக்கத்தின் மூலம் மக்களின் நலன் மீதான அக்கறையை மாநில அரசு புலப்படுத்தியுள்ளது அவர் சொன்னார்.

கோத்தா கெமுனிங் தொகுதியில் உள்ள குறைந்த வருமானம் பெறும்  மக்களின் சுமையைக் குறைப்பதற்காக தொகுதி சேவை மையம் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்துடன் (பி.கே.பி.எஸ்.) இணைந்து மாதந்தோறும் இந்த மலிவு விற்பனையை நடத்தி  வருகிறது என அவர் குறிப்பிட்டார்.

 குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் பயன்பெறும் வகையில் இந்த மலிவு விற்பனை அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நடத்தப்படுகிறது என அவர் சொன்னார்.

இங்குள்ள செக்சன் 25, தாமான் ஸ்ரீ மூடா பங்சாபுரி அண்டோரா வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனையில் கலந்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மாநில அரசின் ஏற்பாட்டிலான மலிவு விற்பனை தவிர்த்து பி.கே.பி.எஸ். மற்றும் செகி ஃப்ரெஷ் பேரங்காடி கூட்டாக இணைந்து நடத்தி வரும் மலிவு விற்பனை களிலும் மலிவான விலையில் பொருள்களை வாங்குவதற்குரிய வாய்ப்பு பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது என்றார் அவர்.

மக்களுக்கு நேரடியாக பலன் தரக்கூடிய இத்தகைய திட்டங்களை தொகுதி சேவை மையம் தொடர்ந்து நடத்தி வரும் என்றும் அவர் உறுதியளித்தார்.


Pengarang :