MEDIA STATEMENTSELANGOR

எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பாகத் தேறிய 147 மாணவர்களுக்கு வெ.35,000 வெகுமதி- கோத்தா கெமுனிங் தொகுதி வழங்கியது

செய்தி. ஆர்.ராஜா

ஷா ஆலம், ஆக 11- கடந்தாண்டு எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பான அடைவு நிலையை பதிவு செய்த கோத்தா கெமுனிங் தொகுதியைச் சேர்ந்த 147 மாணவர்கள் இன்று இங்கு நடைபெற்ற நிகழ்வொன்றில் கௌரவிக்கப்பட்டனர்.

ஷா ஆலம், செக்சன் 32 புக்கிட் ரிமாவ், ஏஸ்டர் எம்.பி.எஸ்.ஏ. மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்வில் இத்தொகுதியிலுள்ள மூன்று இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மூவினங்களையும் சேர்ந்த 147 மாணவர்கள் சான்றிதழ் மற்றும் கணிசமான ரொக்கத் தொகையை சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷிடமிருந்து பெற்றுக் கொண்டனர். சிறப்பு செய்யப்பட்டவர்களில் 16 பேர் இந்திய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்தாண்டு எஸ்.பி.எம். தேர்வில் 8ஏ. 9ஏ மற்றும் 10ஏ பெற்ற மாணவர்களை சிறப்பிக்கும் நோக்கிலான  இந்த நிகழ்வுக்கு தொகுதி சேவை மையம் சுமார் 35,000 வெள்ளியை செலவிட்டுள்ளதாக பிரகாஷ் தெரிவித்தார்.

 எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பாகத் தேறிய மாணவர்களை சிறப்பிக்கும் நோக்கிலும் வரும் ஆண்டுகளில் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப் பட்டதாக அவர் தெரிவித்தார்.

இத்தகைய ஊக்குவிப்பு நடவடிக்கைகளின் வாயிலாக மாணவர்கள் கல்வியில் மேலும் முன்னேற்றத்தைக் காண்பதற்குரிய வாய்ப்பு ஏற்படும். அதே சமயம், பெற்றோர்களின் அர்ப்பணிப்பு க்கும் இது அங்கீகாரமாக விளங்கும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த எஸ்.பி.எம். மாணவர் கௌரவிப்பு நிகழ்வை கோத்தா கெமுனிங் தொகுதி இவ்வாண்டில் முதன்முறையாக தொடங்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், வரும் ஆண்டுகளிலும் இந்த நிகழ்வைத் தொடர்ந்து நடத்த தாங்கள்  திட்டமிட்டுள்ளதாக சொன்னார்.


Pengarang :