MEDIA STATEMENTNATIONAL

இறைச்சி வெட்டும் கத்தி யேந்தி மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட ஆடவர் கைது

ஈப்போ, ஆக 14- கையில் இறைச்சி வெட்டும் கத்தி யேந்தி மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட ஆடவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இச்சம்பவம் ஜாலான் டத்தோ பங்ளிமா புக்கிட் கந்தாங்கில் உள்ள  கெரேத்தாப்பி தானா மெலாயு பெர்ஹாட் சதுக்கத்தில் நேற்று பிற்பகல் 1.45 மணியளவில் நிகழ்ந்தது.

கையில் கத்தியுடன் சம்பவ இடத்தில் காணப்பட்ட மனநிலை பாதிக்கப்பட்டவர் என சந்தேகிக்கப்படும் ஆடவர் குறித்து பொது மக்களிடமிருந்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஜைனால் அபிடின் அபாங் அகமது கூறினார்.

பிற்பகல் 2.00 மணியளவில் அந்த ஆடவரை வெற்றிகரமாக மடக்கிப் பிடித்த போலீசார் அவரிடமிருந்த கத்தியைப் கைப்பற்றியதாக அவர் தெரிவித்தார்.

முப்பத்தோரு வயதான அந்த உள்நாட்டு ஆடவர் வேலையில்லாதவர் எனத் தெரியவருகிறது. அவ்வாடவருக்கு எதிராக நான்கு குற்றப்பதிவுகள் ஒன்பது போதைப்பொருள் தொடர்பான பதிவுகளும் உள்ளது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என அவர்  குறிப்பிட்டார்.

 அந்த ஆடவருக்கு எதிராக 1958ஆம் ஆண்டு அழிவை ஏற்படுத்தும், வெடி மற்றும் அபாயகர ஆயுதச் சட்டத்தின் 6(1)வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று ஜைனால் அபிடின் கூறினார்.

இதனிடையே, உலு கிந்தா மனநோய் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த ஆடவர் ஏற்கனவே மனநல சிகிச்சையை அங்கு பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. ஆகவே, அவரை சிகிச்சைக்காக அங்கு சேர்த்துள்ளோம் என்றார் அவர்.

போலீசார் அவ்வாடவரை நெருங்கி கத்தியை கீழே போடுமாறு பணித்த  போது அவர் தனது கையிலிருந்த கத்தியைச் சுழற்றியவாறு மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாகவும் அவ்வாடவரை மடக்கிப் பிடிக்கும் முயற்சியின் போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :