MEDIA STATEMENTSELANGOR

போலி பொருட்கள் விற்பனை மற்றும் கள்ளப் பதிப்பில் ஈடுபட்ட  4,324 இணையத்தளங்கள் முடக்கம்

போர்ட்டிக்சன், ஆக. 17- கடந்த  2018ஆம் ஆண்டு முதல் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை போலி பொருட்களை விற்பனை செய்தல், கள்ளப் பதிப்பு மற்றும் பிரமிடு திட்ட அடிப்படையிலான நேரடி விற்பனைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கான மொத்தம் 4,324 இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

வணிக ஊக்குவிப்பு மற்றும்  இணைய பரிவர்த்தனைகள் சம்பந்தப்பட்ட விளம்பரங்களைக் கண்காணிக்க மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் மற்றும் இணைய சேவை வழங்குநர்கள்  ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமட் அலி கூறினார்.

இணைய பரிவர்த்தனைகள் மீதான இந்த தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கை, நெறிமுறையற்ற வர்த்தகர்களின் மோசடியிலிருந்து பயனீட்டாளர்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று இன்று ரஹ்மா மடாணி விற்பனை விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

1999ஆம் ஆண்டு பயனீட்டாளர் பாதுகாப்புச் சட்டம், 1961ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டம், 2006 ஆம் ஆண்டு மின்னியல் வர்த்தகச் சட்டம்  மற்றும் 2012 ஆம் ஆண்டு பயனீட்டாளர்  பாதுகாப்பு (மின்னியல் வணிகப் பரிவர்த்தனைகள்) விதிமுறைகள்  உள்ளிட்ட தொடர்புடைய சட்டங்கள் செயல் படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது  என்றார் அவர்.

மேலும், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு அக்காலக்கட்டத்தில்   இ-காமர்ஸ் எனப்படும் மின் வர்த்தக தள சேவை வழங்குனர்களின் இணைந்து 3,408 விளம்பரங்களை   அகற்றியது என்று அர்மிஸான் கூறினார்.

ஆரோக்கியமான மற்றும் முற்போக்கான வர்த்தக சூழலை உருவாக்கும் மற்றும் இணைய பரிவர்த்தனை குற்றங்களை ஒழிக்கும் நோக்கில்  சம்பந்தப்பட்ட ஏஜென்சிகள் மற்றும் அரச மலேசிய காவல்துறையுடன் அமைச்சு  தொடர்ந்து ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :