SELANGOR

சீக்கியர்களுக்கான வழிபாடு தலம் கவனத்தில் கொள்ளப்படும்

பத்து மலை – சீக்கிய சமூகத்திற்கான வழிபாடு தலம் குறித்து மாநில அரசாங்கம் கோம்பாக் மாவட்ட நில அலுவலகத்துடன் கலந்து பேசும் என மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தெரிவித்தார்.

சீக்கிய சமூகம் தங்களுக்கான வழிபாடு தலம் அமைப்பது குறித்து செலாயாங் பாரு குரூட்வாரா சாய்ப் தலைவர் குர்மிட் சிங் முன் வைத்த கோரிக்கை தொடர்பில் கருத்துரைக்கையில் மந்திரி பெசார் இதனை தெரிவித்தார்.

அவர்களின் கோரிக்கை தொடர்பில்  நன்கு ஆராயப்படும் என்றும் இது தொடர்பில் கோம்பாக் மற்றும் பத்து கேவ் நில அலுவலகங்களுடன் தாம் கலந்து பேசவிருப்பதாகவும்  வைசாகி புத்தாண்டை முன்னிட்டு  சீக்கியர்கள் ஏற்பாடு செய்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.

இந்நாட்டில் சீக்கியர்களை  நாம் ஒதுக்கி விட முடியாது என்று கூறிய அவர் அந்த சமூகத்தின் சமய மேம்பாட்டிற்காக இவ்வாண்டு சிலாங்கூர் மாநில அரசாங்கம் வெ.500,000ஐ ஒதுக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.மலேசியாவின் அதிகாரப்பூர்வமான மதமாக இஸ்லாம் இருந்தாலும் இங்கு அனைத்து மதமும் இனமும் மதிக்கப்பட வேண்டும் என்றும் அதுதான் மலேசியாவின் உன்னதம் என்றும் கூறினார்.

சீக்கியர் சமூகம் சிறுபான்மையாக இருந்தாலும் சிலாங்கூர் மாநில வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் அவர்களின் பங்களிப்பு பெருமிதமானது என்றார்.

இதற்கு முன்னதாக குரூமிட் சிங் கூறுகையில் சீக்கியர்களுக்கான புதிய வழிபாடு தலத்தை மேலும் பெரியதொரு பரப்பளவில் கட்டுவதற்கு சங்கம் இலக்கு கொண்டிருப்பதாகவும் அதில் பள்ளிக்கூடம் உட்பட பல்வேறு வசதிகள் அமைந்திருக்கும் என்றூம் கூறினார்.நடப்பில் சுமார் 150 மாணவர்கள் தங்களின் சமய கல்வியினை கொள்கலனில் மேற்கொண்டு வருவதாகவும் நினைவுக்கூர்ந்தார்.

 

 

 

 

 

 


Pengarang :