NATIONAL

சுதந்திர உணர்வு மேலோங்க மக்களுக்கான அரசாங்கம் புத்ரா ஜெயாவில் மாற வேண்டும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 18:

ஆகஸ்ட் 31-ஆம் தேதியோடு மலேசியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. பிரிட்டிஷாரின் கைகளில் இருந்த இந்த நாட்டை மீட்க போராடிய அனைத்து தேசத் தலைவர்களையும் போராளிகளையும் இந்த நாளில் நினைவு கூர்ந்து நமது நன்றிகளைக் கூறிக்கொள்வோம்.
மூவின மக்களின் ஆதரவோடு தேசத் தந்தை துங்கு அப்துல் இரஹ்மானின் தலைமையில் மூவின தலைவர்களும் ஒன்றிணைந்து மலேசியாவிற்கு 1957ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 31ஆம் தேதி சுதந்திரத்தை பெற்றனர்.

மலேசியா சுதந்திரம் பெறுவதற்கு முதன்மை காராணியமாக இருந்தது பல்லின மக்களின் ஒற்றுமையும் புரிந்துணர்வும் தான் என்பதை மறுத்திட முடியாது.
ஆங்கிலேயர்கள் மலேசியர்களிடையே அக்காலத்தில் உயிர்ப்பித்திருந்த ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வை சீர்த்தூக்கிப் பார்த்தே சுதந்திர காற்றை நாம் சுவாசிக்க வழி செய்தனர் என்பதும் வரலாற்று குறிப்பு.சுதந்திரம் என்பது ஏதோ ஒரு இரவில் ஆங்கிலேயர்களால் கொடுக்கப்பட்டதாக கூற முடியாது,அதன் பின்னணியி பலரின் தியாகமும்,போராட்டமும்,உதிரமும் ஏன் உயிர் பலியும் கூட அடங்கியிருப்பதை நாம் மறந்து விட முடியாது.

இத்தகைய பெரும் இழப்புகள் மற்றும் துயரங்களுக்கு மத்தியில் விடியலாய் கிடைத்த சுதந்திரத்தின் உணர்வு கடந்தக்காலங்களில் மலேசியர்கள் மத்தியில் மேலோங்கியிருந்தது.சுதந்திர மாதத்தில் எங்கு பார்த்தாலும் மெர்டெக்கா முழக்கம் நம் காதுகளில் ஒலிக்கும்.சாலைகள் வாகனங்களில் செல்லும் போது ஒவ்வொரு வாகனத்திலும் தேசிய கொடி கம்பீரமாய் பறப்பதை காணும் போது உள்ளம் பூரிப்படையும்.
அதுமட்டுமின்றி,சிறுவர்களும் இளைஞர்களும் தங்களின் மிதிவண்டிகளில் தேசிய கொடியை பறக்க விட்டு அழகு பார்த்த காட்சிகள் இன்னமும் நெஞ்சுக்குள் பசுமையாய் உயிர்ப்பிக்கும்.வீடுகள்தோரும் கண்ணுக்கு வண்ணமாய் தேசிய கொடிகள் தென்படும் நிலையில் நாடே சுதந்திர தின உணர்வில் மூழ்கியிருக்கும்.

நகர்புறங்கள் மட்டுமின்றி தோட்டங்களும் கிராமங்களும் சுதந்திர உணர்வில் பிரகாசமாய் தோரணங்களோடும் தேசிய கொடிகளோடும் வண்ண வண்ண விளக்குகளாலும் அலங்கரித்து சுதந்திரம் என்பது நாட்டின் ஒற்றுமை திருநாளாகவும் மலேசியர்களின் புனிதநாளாகவும் ஒற்றுமையும் புரிந்துணர்வும் மேலோங்க மனிதர்கள் மத்தியில் புன்னகையில் அன்பு மேலோங்கியிருந்ததை காண முடிந்தது.அந்த நினைவுகள் எல்லாம் இன்னமும் நம்முள் எத்தனை எத்தனை கதை சொல்லும்.கடந்தக்கால சுதந்திர தினங்களை நினைவுக்கூர்ந்தால் அவை அனைத்தும் நம்மிடையே பல்வேறு வரலாற்று கதையை நினைவுறுத்துவதோடு பசுமையான நினைவுகளையும் மீட்டெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால்,இன்றைய சூழலில் பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் தியாங்களுக்கு பின்னணியில் கிடைக்கப் பெற்ற சுதந்திர உணர்வு இன்று மலேசியர்களுக்கு தொடர்ந்து அந்நியமாகி வருகிறது.அதுமட்டுமின்றி,கடந்தகாலங்களை போல் இல்லாமல் நடப்பியல் சூழலில் மலேசியர்களிடையே சுதந்திர உணர்வும் சரிந்துக் கொண்டுதான் வருகிறது.இது வெறும் வார்த்தையல்ல.நடப்பில் நம் கண்களால் காணும் வருத்தமான சம்பவங்கள் எனலாம்.
ஆங்கிலேயர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற சுதந்திரம் இன்றைய அரசியல் சூழலிலும் அரசாங்கத்தின் விவேகமற்ற செயல்பாட்டாலும் அதன் உன்னதத்தை இழந்து மலேசியர்களிடையே சுதந்திர உணர்வு தொலைந்துக் கொண்டிருப்பதற்கு பெரும் காரணியமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.தேசிய முன்னணி அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருக்கும் வெறுப்பு நாட்டின் சுதந்திரத் தின உணர்வைக்கூட மறக்க செய்துள்ளது என்பது பெரும் வேதனையானது.

சுமார் 60 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்து வரும் தேசிய முன்னணி அரசாங்கம் மக்களுக்கான அரசியலை முறையாக முன்னெடுக்காமல் போனதும் இதற்கு முக்கிய காரணியம்.நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம்,பொருளாதார பின்னடைவு,வறுமை – ஏழ்மை,ஊழல்,லஞ்சம்,முறையற்ற கல்வி கொள்கை,மலேசியர்களிடையே உருவாக்கப்பட்டிருக்கும் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றுக்கு மத்தியில் இனரீதியிலான அணுகுமுறை ஆகியவை மலேசியர்கள் மத்தியில் ஆளும் மத்திய அரசாங்கத்தின் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தியிருப்பதோடு அஃது நாட்டின் சுதந்திர தினத்தையும் மறக்கடிக்கும் நிலைக்கு மலேசியர்களை தள்ளியுள்ளது.

இதற்கு காரணியம் அரசாங்கத்தையும் நாட்டையும் ஒரே உணர்வோடும் ஒரே கோட்டிலும் மலேசியர்கள் பார்ப்பதுதான். இந்நிலையில்,ஆளும் மத்திய அரசாங்கம் செய்யும் ஒவ்வொரு தவறும் மலேசியர்களிடையே நாட்டின் சுதந்திரத்தின் மீதும் தனித்துவ வெறுப்பினை ஏற்படுவதை தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது.குறிப்பாக இளம் தலைமுறையினர் மத்திய அரசாங்கத்தில் நிலவும் ஊழல்,லஞ்சம்,வேலையில்லா திண்டாட்டம்,கல்வி சிக்கல் ஆகியவற்றோடு பொருளாதார சுமையாலும் நாட்டில் பெரும் சிக்கலை எதிர்நோக்கிடும் சூழலில் தங்களின் எதிர்காலம் இருள் சூழ்ந்து கிடப்பதாகவும் அதிலிருந்து மீள ஒவ்வொரு நாளும் பல்வேறு போராட்டங்களை சந்திக்க வேண்டியுள்ளதால் அவர்கள் ஆளும் அரசாங்கத்தின் மீது வெறுப்புக் கொள்வதோடு மட்டுமின்றி சுதந்திரம் என்பது இன்னமும் இளம் மலேசியர்களுக்கு கேள்விக்குறியாகவே இருப்பதாக உணர்கிறார்கள்.

கடந்தக்காலங்களில் பள்ளிகளிலும்,வீடுகளிலும், வணிகத்தலங்களிலும், வாகனங்களிலும் கம்பீரமாய் பறந்த தேசிய கொடிகளை இன்று கோரிக்கை விடுத்து பறக்க விட சொல்வதும் சுதந்திர தின கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்ய சொல்வதும் மலேசியர்களிடயே சுதந்திர உணர்வு அந்நியமாகி விட்டது என்பதற்கு பெரும் சான்று எனலாம்.
மலேசியர்களிடையே மீண்டும் சுதந்திர உணர்வு கடந்தக்காலாங்களை போல் உயிர்பிக்க வேண்டுமானால் மக்களுக்கான மத்திய அரசாங்கம் அமைய வேண்டியதும் மிகவும் அவசியமாகிறது.சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை போல மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்களுக்கான அரசாங்கம் உருவெடுத்தால் இனி வரும் ஒவ்வொரு சுதந்திர தினமும் மலேசியாவில் உண்மையான சுதந்திர உணர்வோடு கொண்டாடப்படும் என்பது உறுதி.

நாட்டின் 14வது பொது தேர்தலுக்கு பின்னர் இஃது சாத்தியமானால் ஒவ்வொருவரின் உணர்விலும் உன்னதமான “மெர்டெக்கா” “மெர்டெக்கா” “மெர்டெக்கா” எனும் முழக்கத்தை உணர்வுப்பூர்வமாக காண முடியும்.
இந்த 60ஆம் ஆண்டு சுதந்திர தினத்தில் நமது அடுத்த தலைமுறை உண்மையான சுதந்திரத்தோடு மலேசியா மலேசியர்களுக்கு எனும் உன்னத் கொள்கையோடு சரியான் இலக்கை நோக்கி பயணிக்க நாம் அனைவரும் சுதந்திரமான சிந்தனையோடு மக்களுக்கான புதியதொரு அரசாங்கத்தையும் புதியதொரு மலேசியாவையும் உருவாக்க உறுதிக்கொள்ள வேண்டும்.
“மெர்டெக்கா” “மெர்டெக்கா” “மெர்டெக்கா”

#ரௌத்திரன்


Pengarang :