SELANGOR

ஈஜோக் நிலவிவகாரம் தொடர்பில் மாநில அரசின் அறிக்கையை விமர்சனம் செய்வது அறிவுடமையல்ல!!

காப்பார்,மார்ச் 23:

ஈஜோக் நில விவகாரம் தொடர்பில் மாநில அரசு மிகவும் தெளிவான விளக்கத்தையும் அறிக்கையையும் வழங்கி விட்டது.மாநில அரசின் அந்த விளக்கம் பல்வேறு தரப்பின் கேள்விகளுக்கு விடையாகவே அமைந்துள்ளது என்றும் மந்திரி பெசார் கூறினார்.

மாநில அரசு வெளியிட்ட விளக்கம் மற்றும் அறிக்கை தொடர்பில் விமர்சனம் செய்வது அறிவுடமையாகாது என்றும் அவர் மேலும் கூறினார்.மாநில அரசு அவ்விவகாரத்தில் சட்டத்திற்கு உட்பட்டே செயல்பட்டுள்ளது என்றும் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் எழுத்து வடிவில் மிகவும் தெளிவான நேர்த்தியான விளக்கத்தை நாம் வழங்கி விட்டோம்.இருந்தும் சில தரப்பினர் இன்னமும் இது குறித்து சர்ச்சையை எழுப்புவது அறிவுடமையாகாது என்றார்.

மாநில அரசு பொதுவில் எல்லாவற்றையும் முன் வைத்த நிலையிலும் சில ஊடகங்களும் திசைதிருப்பும் முயற்சியினை மேற்கொள்வது அர்த்தமற்றது.ஊடகங்கள் விவேகமாக நடந்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மலேசிய லஞ்சம் ஊழல் தடுப்பு ஆணையம் இந்நில விவகாரம் தொடர்பில் விசாரணைக்காக 7 பேரை தடுத்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மாநில அரசு ஈஜோக் குடியேற்றவாசிகளின் நலனை முதன்மையாக கருதுவதாகவும் கூறிய மந்திரி பெசார் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் வெ.180,000 இழப்பீடாகவும் வெ.400,000 மதிப்பிலான வீட்டையும் பெற்றதாகவும் அவர் நினைவுக்கூர்ந்தார்.

ஈஜோக் நில விவகாரம் உண்மையில் தேசிய முன்னணி காலத்தில் தொடங்கிய ஒன்று.பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களுக்கு நீதி கிடைக்க 18 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்ததாகவும் கூறிய மந்திரி பெசார் மக்களுக்கு நல்ல தீர்வை ஏற்படுத்தியது நடப்பு சிலாங்கூர் மாநில அரசுதான் என்றும் நினைவுறுத்தினார்.

மாநில அரசின் பரிவு மிக்க சிந்தனைதான் ஈஜோக் மக்களின் இத்தனை ஆண்டுகால பிரச்னைக்கு தீர்வினை ஏற்படுத்தியதாகவும் மந்திரி பெசார் பெருமிதமாக கூறினார்.


Pengarang :