SELANGOR

சிலாங்கூர் சட்ட மன்றத்தை முன்கூட்டியே கலைக்கும் பரிந்துரை எதுவும் இல்லை

சுங்கை பூலோ, மார்ச் 25:

சிலாங்கூர் மாநில சட்ட மன்றத்தை முன்கூட்டியே கலைக்கப்படும் எண்ணம் மாநில அரசாங்கத்திற்கு இல்லை என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு முன்பு சிலாங்கூர் மாநில சட்ட மன்றம் கலைக்கப்படும் தகவல்களை மறுத்தார். மேலும் , சிலாங்கூர் மாநில நிர்வாகம் இந்த முடிவை எடுக்கும் எண்ணம் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

”  சட்ட மன்றத்தை முன்கூட்டியே கலைக்கும் தேவைகள் எழவில்லை. ஆனால், தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எதிர்த்து போராட சிலாங்கூர் சட்ட மன்றம் நோக்கத்தை கொண்டிருக்கிறது. சிலாங்கூர் மாநில அளவில் தொகுதி மறுசீரமைப்பு அரசியலமைப்பு சட்டத்தை மீறியே செய்யப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே. ஆகவே, நாம் தொடர்ந்து தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து குரல் கொடுப்போம்; நீதிமன்றத்தில் வழக்குகளை தொடுப்போம்,” என்று பாயா ஜெராஸ் சட்ட மன்ற தொகுதியில் முன்னாள் ராணுவ அதிகாரிகளுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில சட்ட மன்றம் மேன்மை தங்கிய சிலாங்கூர் அரசர் சுல்தான் ஷாராஃபூடின் இட்ரிஸ் ஷா ஒப்புதலோடு திங்கட்கிழமை ஆரம்பிக்க இருக்கிறது.


Pengarang :