NATIONAL

பாக்காத்தான் கூட்டணி வென்றால் இசிஆர்எல் இரயில் திட்டம் இரத்து செய்யப்படும்

ஷா ஆலாம், ஏப்ரல் 03:

நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் ஹராப்பான் கூட்டணி வென்றால் வீண் விரையம் என கருதப்படும் பந்தாய் தீமோர் இரயில் ( இசிஆர்எல்) திட்டம் இரத்து செய்யப்படும் என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் சிக்கலான இத்திட்டம் மீண்டும் நன்கு ஆராயப்படும்.சுமார் 688 கி.மீட்டர் தூரத்திற்கு வெ.55 பில்லியன் செலவில் கட்டப்படும் அந்த இரயில் திட்டம் அதன் உன்னத இலக்கில் செயல்படுகிறதா என்றும் ஆராயப்படும் என துன் மகாதீர் கூறினார்.

அத்திட்டம் அவசியம் இல்லை என்றால்.அதனை நிறுத்துவதே விவேகம்.தொடர்ந்து கடனை சுமந்து செல்வதை காட்டிலும் நஷ்ட ஈடு கொடுத்து அத்திட்டத்தை நிறுத்துவதே சிறப்பு என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் கிளாந்தான் கோத்தாபாருவிலிருந்து கிள்ளான் துறைமுகம் வரை 14 மணிநேர பயணம் என்பது அர்த்தமற்றது.மக்களும் அதனை விரும்ப மாட்டார்கள் என்றும் கூறிய மகாதீர் விமானம் வழி 30 நிமிடம் மட்டுமே தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில்,அத்திட்டம் உண்மையாகவே அர்த்தமற்ற ஒன்றாகவும் அதிகமான செலவினத்தையும் கொண்டிருக்கும் சூழலில் அதனை நிறுத்துவதற்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் கடும் நடவடிக்கையினை மேற்கொள்ளும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார்.

இத்திட்டம் அதிகமான செலவை எட்டியுள்ளது.இது மக்களின் பணத்தை விரையமாக்கிறது.மக்களின் நலனையும் அவர்களின் பணத்தையும் காக்கவேண்டிய கடமை எனக்கு இருப்பதால் அதனை நுண்ணறிவுடன் செயல்பட வேண்டியிருப்பதாகவும் கூறினார்.இத்திட்டத்தால் மக்களை காட்டிலும் சம்மதப்பட்ட நிறுவனமும் குறிப்பிட்ட சிலருமே லாபம் அடைகிறார்கள் என்றும் கூறினார்.

இத்திட்டத்தை சீன நாட்டு நிறுவனம் மேற்கொண்டு வரும் நிலையில் அஃது 2024இல் முடிவடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Pengarang :