NATIONAL

தெனாகா நேஷனல் நிறுவனம் 15 முதல் 50 விழுக்காடு கழிவு வழங்குகிறது !!!

கோலா லம்பூர், ஜூன் 8:

ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கி செப்டம்பர் 30-ஆம் தேதி வரை, மாதத்திற்கு அதிகபட்சமாக 600 கிலோவாட் மின்சாரம் பயன்படுத்தும் 80 விழுக்காடு வாடிக்கையாளர்களுக்கு, தெனாகா நேஷனல் நிறுவனம் 15 முதல் 50 விழுக்காடு கழிவு வழங்க விருக்கிறது.

பரிவுமிக்க மக்கள் உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த சலுகையின் மூலம், B40 மற்றும் M40 பிரிவுகளைச் சேர்ந்த, சுமார் 63 லட்சம் வீடுகள் பயன்பெறும் என்று, டிஎன்பி நிறுவனத்தின் விற்பனை பிரிவு அதிகாரி மெகாட் ஜலாலுடின் மெகாட் ஹஸ்சான் தெரிவித்திருக்கிறார்.

அத்திட்டத்தின் கீழ், 600 கிலோவாட் மின்சார பயன்பாட்டிற்கு 50 விழுக்காடும், 201-ல் இருந்து 300 கிலோவாட் மின்சார பயன்பாட்டிற்கு 25 விழுக்காடும், 301-ல் இருந்து 600 கிலோவாட் மின்சார பயன்பாட்டிற்கு 15 விழுக்காடு கழிவு வழங்கப்படும்.

மேலும், வர்த்தகம், தொழில்துறை மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளுக்கான மின்சார பயன்பாட்டிற்கும் கழிவு வழங்க அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது.

ஆறு மாதங்களுக்கு வழங்கப்படும் இந்த சலுகைக்கு, டிஎன்பி நிறுவனம் மூலமாக அரசாங்கம் 53 கோடி ரிங்கிட் ஒதுக்கியுள்ளது.

கொவிட் 19-தால் பாதிக்கப்பட்ட பயனீட்டாளர்களின் சுமையைக் குறைக்க மாதாந்திர தவணைக் கட்டண முறையும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

–பெர்னாமா


Pengarang :