ALAM SEKITAR & CUACANATIONALSELANGOR

சுங்கை கோங் ஆற்றில் கலந்த கருமை நிற நீர் மீது ஆய்வு

ஷா ஆலம், செப் 23- நீர் மாசுபாடு காரணமாக அண்மையில் கடுமையாக பாதிக்கப்பட்ட சுங்கை கோங் ஆற்றில் கடந்த சனிக்கிழமை மீண்டும் தூய்மைக்கேடு ஏற்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

அந்த ஆற்றில் கலந்த கருமை நிறத்திலான நீர் சோதனைக்காக இரசாயன இலாகாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த நீரின் தன்மை மீதான சோதனை முடிவுகள் குறைந்தது ஏழு நாட்களில் தெரியவரும் என்று சுற்றுச்சூழல் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

அந்த ஆற்றின் அருகில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகள் ஆற்றில் கலந்ததா என்பதை கண்டறிவதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அந்த நீரின் மாதிரி மீது விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. வழக்கமாக, இது போன்ற சோதனையின் முடிவுகள் வெளிவர 7-முதல் 14 நாட்கள் வரை பிடிக்கும். எனினும், அந்த அறிக்கை விரைவில் கிடைக்கும் என நாங்கள் எதிர் பார்க்கிறோம் என்று அவர் சிலாங்கூர் கினியிடம் சொன்னார்.

சுங்கை சிலாங்கூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நீர் நிலைகள் மீது லுவாஸ் மற்றும் ஆயர் சிலாங்கூர் நிறுவனங்கள் 24 மணி நேர சோதனையை மேற்கொண்ட காரணத்தால் இம்முறை ஆற்றின் தூய்மைக்கேடு விரைவாக கண்டு பிடிக்கப்பட்டதாக ஹீ கூறினார்.

 

 

 


Pengarang :