கோவிட்-19 நோய்த் தொற்று பரவலின் எதிரொலி- டோப் கிளோவ் நிறுவனத்தை மூட மேரு சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

ஷா ஆலம், நவ 24-  டோப் கிளோவ் நிறுவனத்தில் கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் அச்சமூட்டும் வகையில் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு கூட்டரசு அரசாங்கம் அந்த கையுறை தயாரிப்பு நிறுவனத்தின் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று மேரு சட்டமன்ற உறுப்பினர் முகமது பக்ருள்ரஷி மொக்தார் கேட்டுக்  கொண்டுள்ளார்.

அந்த தொழிற்சாலை மூலம் கிடைக்கும் லாபத்தை விட சுற்றுவட்டார  மக்களின் பாதுகாப்பு மிக முக்கியமாகும் என அவர் சொன்னார்.

அந்த தொழிற்சாலை ஊழியர்களை உள்ளடக்கிய தெராத்தாய் தொற்று மையத்தில் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு  மிகவும் அச்சமூட்டும் வகையில் உள்ளது. இது மேரு வட்டார மக்களையும் அந்த நிறுவனத்தில் வேலை செய்து வரும் சுற்றுவட்டார மக்களையும் கலக்கமடையச் செய்துள்ளது என்றார் அவர்.

கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் காரணமாக கிள்ளான், மேருவிலுள்ள தனது 28  தொழிற்சாலைகளின் உற்பத்தி நவடிக்கைகளை கட்டங் கட்டமாக நிறுத்திக் கொள்வதாக டோப் கிளோவ் நிறுவனம் நேற்று கூறியிருந்தது.

தொழிலாளர் விடுதிகளில்  தங்கியிருக்கும் 5,700 தொழிலாளர்களுக்கும் கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்பதோடு தொழிற்சாலை மற்றும் குடியிருப்புகளில் கிருமி நாசினி தெளிப்பு நடவடிக்கையும் அடிக்கடி மேற்கொள்ளப்படும் என அது தெரிவித்தது.

நேற்று  சிலாங்கூரில் அடையாளம் காணப்பட்ட 1,203 கோவிட்-19 நோய் தொற்று சம்பவங்களில் 1,067 அந்த தொழிற்சாலையை உட்படுத்திய தெராத்தாய் தொற்று மையத்தில் பதிவானவையாகும்.


Pengarang :