ECONOMY

நீரை சுத்திகரிப்பதற்கு நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது மீதான ஆய்வு தொடக்க கட்டத்தில் உள்ளது

ஷா ஆலம், நவ 24- மாசடைந்த ஆற்று நீரை சுத்திகரிப்பதற்கு நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பான ஆய்வு தொடக்க கட்டத்தில் உள்ளதாக நவீன விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஸாம் ஹஷிம் கூறினார்.

அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட இந்த நானோ தொழில்நுட்பம் டியாத்தோம் எனப்படும் செல்லை ஆற்று நீரில் கலப்பதை அடிப்படையாக கொண்டது என்று அவர் சொன்னார்.

இந்த முன்னோடித் திட்டத்தில் மலேசிய தேசிய பல்கலைக்கழகம் மற்றும் மலாயா பல்கலைக்கழக உயிரியல் இரசாயன நிபுணர்களை உள்ளடக்கிய தனியார் நிறுவனத்தின் தொழில்நுட்பமும்  இணைக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த ஒருங்கிணைப்பின் வாயிலாக இரசாயனத்தை பயன்படுத்தாமல் நீரை சுத்தப்படுத்துவதற்கு  உயிரியல் டியாத்தோம் முறையை பயன்படுத்துவதற்குரிய வாய்ப்பு ஏற்படும். இதன் வழி நீர் மற்றும் தாவர வகைகளுக்கு பயன்படக்கூடிய நல்ல பாக்டீரியாவை நீரிலிருந்து பிரிக்க இயலும் என்றார் அவர்.

மீடியா சிலாங்கூர்  முக நூல் வாயிலாக நடத்தப்பட்ட நேரடி விவாத நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்தார்.

 


Pengarang :