SELANGORWANITA & KEBAJIKAN

சிலாங்கூரில் 0.21 விழுக்காட்டினர் மத்தியில் மட்டுமே போதைப் பழக்கம்

ஷா ஆலம்,  டிச 9- சிலாங்கூரில் போதைப் பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 0.21 விழுக்காடாக மட்டுமே உள்ளது. இது நாட்டிலேயே மிகவும் குறைவான எண்ணிக்கையாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சுமார் 63 லட்சம் பேர் வசிக்கும் சிலாங்கூர் மாநிலத்தில் பதிவான இந்த குறைவான எண்ணிக்கை மிகவும் மகிழ்ச்சியளிக்கக்கூடியதாக உள்ளதாக அவர் சொன்னார்.

போதைப் பொருளுக்கு எதிரான போராட்டத்தில் நாம் இன்னும் வெற்றி பெறவில்லை. இப்பிரச்னைக்கு முழுமையான தீர்வு காண்பதற்கு ஏதுவாக தேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுனமும் பெமாடாம் எனப்படும் மலேசிய போதைப் பொருள் தடுப்புச் சங்கமும் மேலும் அதிகமான பிரசார இயக்கங்களை மேற்கொள்ளும் என தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

சிலாங்கூர்  மாநில பெமாடாம் அலுவலகத்தில் போதைப் பொருள் தடுப்பு தடத்தை திறந்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனை கூறினார்.

மாநிலத்தின் அடர்த்தியான மக்கள் தொகை காரணமாக போதைப் பொருள் பிரச்னையை முழுமையாக துடைத்தொழிப்பதில் சிலாங்கூர் அரசு சிரமத்தை எதிர்நோக்குவதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் தலைநகரத்திற்கு அருகில் அமைந்துள்ள  காரணத்தால் சிலாங்கூர் அதிக அடர்த்தியான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக போதைப் பழக்கம் உள்பட குற்றச்செயல்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் சூழல் ஏற்படுகிறது என அவர் மேலும் சொன்னார்.


Pengarang :