SELANGOR

கோவிட்-19 நோய் கண்ட 80 விழுக்காட்டினரிடம் நோய்த் தொற்றுக்கான அறிகுறி இல்லை

ஷா ஆலம், டிச 30- சிலாங்கூர் அரசின் சமூக மருத்துவ சோதனைத் திட்டத்தின் வழி மேற்கொள்ளப்பட்ட கோவிட்-19 சோதனையில் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட சுமார் 80 விழுக்காட்டினர் அந்நோய்க்கான எந்த அறிகுறியும் கொண்டிருக்கவில்லை.

அந்நோய் மக்களிடையே குறிப்பாக நோய் பீடிக்கும் சாத்தியம் அதிகம் உள்ளவர்களுக்கு பரவாமல் தடுப்பதற்கு ஏதுவாக கோவிட்-19 நோய்த் தொற்றை கண்டறியும் மருத்துவச் சோதனை  நடத்தப்படுவது அவசியமாகும் என்று செலங்கா திட்ட இயக்குநர் டாக்டர் ஹில்மி ஜக்காரியா கூறினார்.

நமது உடலாரோக்கியம் குறித்து அறிந்திருப்பது மிக அவசியம். ஆகவேதான் தனிப்பட்ட முறையில் அல்லது சமூகத்தை இலக்காக கொண்ட சோதனையில் பங்கெடுப்பது அவசியம் என்று அவர் சொன்னார்.

சமூகத்தை இலக்காக கொண்ட கோவிட்-19 சோதனையை தங்கள் பகுதியில்  நடத்த விரும்புவோர் screening.selangkah.my  எனும் அகப்பக்கம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.

இந்நோக்கத்திற்கு தேவைப்படும் விபரங்களை முழுமையாக வழங்க வேண்டும். அந்த விபரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடத்தில் கோவிட்-19 சோதனையை மேற்கொள்வதா? இல்லையா? என்பதை சிலாங்கூர் மாநில கோவிட்-19 பணிக்குழு முடிவெடுக்கும் என்றார் அவர்.

குடியிருப்புப் பகுதிகளில் சோதனை கொள்வது மற்றும் வாகனங்களில் இருந்தவாறு சோதனை செய்வது ஆகிய இரு முறைகளில் கோவிட்-19 சமூக சோதனை திட்டம் அமல்படுத்தப்படுகிறது.


Pengarang :