SELANGOR

அரசு ஊழியர்களுக்கு சிறப்பு உதவி நிதியாக அரை மாத சம்பளம்- இன்று வழங்கப்படுகிறது

ஷா ஆலம், டிச 29– சிலாங்கூர் மாநிலத்திலுள்ள கிரேட் 54க்கும் கீழுள்ள அரசு ஊழியர்கள் சிறப்பு உதவி நிதியாக அரை மாத சம்பளத்தை இன்று பெறுகிறார்கள்.

கடந்த அக்டோபர் மாதம்  மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்தபடி இந்த உதவித் தொகை வழங்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மாநில அரசு வழங்கும் இந்த உதவித் தொகையை மாநில அரசு ஊழியர்கள் முறையான வழிகளில் பயன்படுத்திக் கொள்வர் எனத் தாம் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.

கோவிட்-19 நோய்த் தொற்று பிரச்னையினால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு உதவும் வகையில் மாநில அரசு முதன் முறையாக கடந்த ஜூன் மாதம் தலா ஆயிரம் வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

அரசு ஊழியர்கள், ஊராட்சி மன்ற பணியாளர்கள், அரசு சார்பு மற்றும் அரசு துணை நிறுவன ஊழியர்கள் உள்பட 18,500 பேர் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி தலா ஆயிரம் வெள்ளியை உதவித் தொகையாக பெற்றனர். இந்நோக்கத்திற்காக மாநில அரசு 1 கோடியே 85 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்தது என்றார் அவர்.

அரசு ஊழியர்களுக்கு இரண்டாம் கட்டமாக உதவித் தொகை வழங்குவதற்கு 1 கோடியே 65 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது மந்திரி புசார் கூறியிருந்தார்.


Pengarang :