.
ECONOMYSELANGOR

சுபிட்சத்திற்கு தலைவர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்- புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில்  சுல்தான் அறிவுறுத்து

ஷா ஆலம், ஜன 2- மக்களின் சுபிட்சத்தைக் கட்டிக்காப்பதற்கான முயற்சிகள் மீது தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா வலியுறுத்தியுள்ளார்.

மக்களின் வருமானம் பெருக்கம் காண்பதற்கு உதவுவதில் அரசியல் வேறுபாடுகளைக் மறந்து அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவது அவசியம் என்று அவர் சொன்னார்.

அரசியல் வேறுபாடுகளைக் களைந்து அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்பதோடு மக்களின் சுபிட்சத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும் என்பது இந்த புத்தாண்டில்  நான் விடுக்கும் கோரிக்கையாகும். தலைவர்கள் எப்போதும் சர்ச்சையில் ஈடுபடுவதையும் சுயலாபத்தை மட்டும் கருதுவதையும் தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.

ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி காணும் போது மக்களின் வருமானமும் அதிகரிக்கும் என்று நாட்டு மக்களுக்கு வழங்கிய புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் சுல்தான் குறிப்பிட்டார்.

மக்கள் பல்வேறு துறைகளில் வெற்றி பெறுவதற்குரிய வாய்ப்பினை இந்த புத்தாண்டு ஏற்படுத்தும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.

நாட்டில் தீவிரமாக பரவி வரும் கோவிட்-19 நோய்த் தொற்று விரைவில் முடிவுக்கு வந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்பது தமது பிரார்த்தனையாகும்  என்றும் அவர் தெரிவித்தார்.

பல்லின மக்களைக் கொண்ட மலேசியாவுக்கு இந்த 2021ஆம் ஆண்டு சிறப்பான ஒரு ஆண்டாக திகழும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :