கோல சிலாங்கூர் மாவட்ட மன்றத்திற்கு நகராண்மைக்கழக அந்தஸ்து- ஆட்சிக்குழு உறுப்பினர் கோடி காட்டினார்

ஷா ஆலம், ஜன 2– கோல சிலாங்கூர் மாவட்ட மன்றம் இவ்வாண்டில் நகராண்மைக்கழக அந்தஸ்து பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஊராட்சி மன்றத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

எனினும், சேவைத் தரத்தை உயர்த்துவதில் அந்த ஊராட்சி மன்றம் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நகராண்மைக்கழகமாக தரம் உயர்த்தப்படுவதற்கு கோல சிலாங்கூர் மாவட்ட மன்றம் கடந்தாண்டு முதல் காத்திருக்கிறது. அந்த ஊராட்சி மன்றம் இவ்வாண்டு நகராண்மைக்கழக அந்தஸ்தைப் பெறுவதற்கான சாத்தியம் உள்ளதாக நான் கருதுகிறேன் என்றார் அவர்.

நகராண்மைக்கழக அந்தஸ்தை பெறுவதில் மட்டும் முனைப்புக் காட்டக்கூடாது என்பதை சம்பந்தப்பட்டத் தரப்பினருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். மாறாக, சேவையின் தரமும் உயர்த்தப்பட்டால் மட்டுமே எண்ணிய எண்ணம் ஈடேறும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கோல சிலாங்கூர் மாவட்ட மன்றம் இவ்வாண்டில் நகராண்மைக்கழக அந்தஸ்தைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக மாவட்ட மன்றத் தலைவர் அண்மையில் கூறியிருந்தது தொடர்பில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

நகராண்மைக்கழக அந்தஸ்து பெறுவது தொடர்பில் வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சின் ஒப்புதலுக்காக கோல சிலாங்கூர் மாவட்ட மன்றம் காத்திருப்பதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஆகஸ்டு மாதம் கூறியிருந்தார்.

ஊராட்சி மன்றத்தை நகராண்மைக்கழகமாக தரம் உயர்த்தும் விஷயத்தில் மக்கள் தொகை, வருமானம், வரி வசூல் போன்ற அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது சிலாங்கூரில் ஷா ஆலம், பெட்டாலிங் ஜெயா, சுபாங் ஜெயா ஆகிய ஊராட்சி மன்றங்கள் மாநகர் மன்றங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இவை தவிர்த்து, செலாயாங், அம்பாங் ஜெயா, கிள்ளான், காஜாங், கோல லங்காட், சிப்பாங் ஆகியவை நகராண்மைக்கழகங்களாக அந்தஸ்து பெற்றுள்ள வேளையில் உலு சிலாங்கூர், கோல சிலாங்கூர், சபாக் பெர்ணம், கோல சிலாங்கூர் ஆகியவை மாவட்ட மன்றங்களாக உள்ளன.


Pengarang :