NATIONALPENDIDIKANSELANGOR

மோரிப் தொகுதியிலுள்ள 11 பள்ளிகளை மேம்படுத்த வெ.331,000 லட்சம் ஒதுக்கீடு

ஷா ஆலம், ஜன 8- மோரிப் சட்டமன்றத் தொகுதியிலுள்ள 11 பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 3 லட்சத்து 31 ஆயிரம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி  மூன்று தமிழ்ப்பள்ளிகள்,  இரண்டு சீனப் பள்ளிகள், ஒரு  ஒருங்கிணைந்த ஆரம்ப பள்ளி, இரண்டு மஹாட் தாபிஸ் பள்ளிகள் ஒரு தாபிஸ் மதராஸா மற்றும் இரண்டு அல்-குர்ஹான், ஃபார்டு அய்ன் வகுப்புகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படும்.

மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் தேவையின் அடிப்படையில் 5,000 வெள்ளி முதல் 1 லட்சம் வெள்ளி வரை பள்ளிகளுக்கு மானியம் வழங்கப்படும் என்று மோரிப் சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுள் பகாருடின்  கூறினார்.

சிலாங்கூரில் உள்ள 740 பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு 2 கோடியே 24 லட்சத்து 73ஆயிரம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்தாண்டு நவம்பர் மாதம் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது கூறியிருந்தார்.

இந்த நிதியிலிருந்து 91 லட்சத்து 13 ஆயிரம் வெள்ளி 538 சமயப் பள்ளிகளுக்கும் 60 லட்சம் வெள்ளி 101 சீன ஆரம்ப பள்ளிகளுக்கும் 43 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி ஆரம்ப தமிழ்ப்பள்ளிக்கும் ஒதுக்கப்பட்டன.

இது தவிர, 4 சீன தனியார் இடைநிலைப்பள்ளிகள் 20 லட்சம் வெள்ளியும் 14 முபாலிக் பள்ளிகள் மற்றும் தேசிய ஆரம்ப பள்ளிகள் ஒரு லட்சம் வெள்ளியும் பெற்றன.


Pengarang :