PENDIDIKANSELANGOR

எஸ்.பி.எம்.-எஸ்.டி.பி.எம். மாணவர்களுக்கு உதவ புதிய அகப்பக்கம்- பதிவு செய்ய  மாணவர்களுக்கு வேண்டுகோள்

ஷா ஆலம், ஜன 16- எஸ்.பி.எம். மற்றும் எஸ்.டி.பி.எம். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவும் வகையில் eptrs.my என்ற கல்வி அகப்பக்கத்தை சிலாங்கூர் மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

எஸ்.பி.எம். மாணவர்கள் மலாய் மொழி, ஆங்கிலம், அறிவியல், கணிதம், வரலாறு ஆகிய பாடங்களையும் எஸ்.டி.பி.எம். மாணவர்கள் பொது கல்வி மற்றும் முயேட் எனப்படும் ஆங்கில மொழி தேர்வு ஆகிய பாடங்களையும் கற்பதற்குரிய தளமாக இந்த அகப்பக்கம் விளங்குவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மாணவர்கள் ஆசிரியர்களுடன் கேள்வி பதில் அங்கத்தில் பங்கேற்பதற்குரிய வாய்ப்பினையும் இந்த அகப்பக்கம் வழங்குகிறது. மாணவர்கள் பாடங்களை மீளாய்வு செய்வதற்கு ஏதுவாக கல்வி சார்ந்த காணொளிகளும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன என்றார் அவர்.

மாநில கல்வி இலாகா, சிலாங்கூர் மாநில பொது நு லகம், எம்.பி.ஐ.எனப்படும் மந்திரி புசார் கழகம் ஆகிய துறைகளின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக புதிய இயல்பில் தேர்வை எதிர் கொள்ளும் மாணவர்களுக்கு இத்திட்டம் பெரிதும் துணை புரியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்தாண்டு மார்ச் மாதம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட போது சிலாங்கூர் அரசு மின்னியல் கற்றல் மற்று சிலாங்கூர் டியூட்டர் ஆகிய கல்வி திட்டங்களை அமல்படுத்தியிருந்தது.

சுமார் முப்பது லட்சம் கேள்விகளை உள்ளடக்கிய இந்த பாடத் திட்டத்திற்கு  மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம்  வரை நடத்தப்பட்ட இந்த பாடத்திட்டத்தில் ஒரு லட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.

 


Pengarang :