ECONOMYSELANGOR

நகர்ப்புற சிறார்களின் சத்துணவு திட்டத்திற்கு 10 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு

ஷா ஆலம், பிப் 4-  ஏழ்மை நிலையில் உள்ள நகர்ப்புற சிறார்களுக்கு சத்துணவு விநியோகம் செய்யும் திட்டத்திற்கு சிலாங்கூர் அரசு இவ்வாண்டு முன்னுரிமை அளிக்கவுள்ளது.

இந்நோக்கத்தின் அடிப்படையில் சிறார் உணவு வங்கித் திட்டத்திற்காக இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் 10 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பில் உள்ள திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 50 லட்சம் வெள்ளி தவிர்த்து கூடுதலாக ஒதுக்கப்பட்ட நிதி அதுவாகும்.

ஒன்பது சிறார்களில் ஒருவர் சத்துணவு குறைபாடு பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளதாக ஐ.நா.வின் 2019 ஆம் ஆண்டின் நீடித்த மேம்பாட்டு இலக்கு அறிக்கை கூறுகிறது.

சிறார்கள் மத்தியில் காணப்படும் சத்துணவு குறைபாடு பிரச்சினை கவலையளிக்கும் வகையில் உள்ளது என்ற யுனிசெப் அறிக்கை இவ்விவகாரத்தில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பலவீனமாகவும் ஒல்லியாகவும் உள்ள சிறார்களை மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்புகளில் அதிகம் காணமுடிவதாக சுகாதார துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

கோத்தா டாமன்சாரா பி.பி.ஆர். குடியிருப்பில் மாநில சுகாதார துறை மேற்கொண்ட ஆய்வில் 33 விழுக்காட்டு சிறார்கள் ஊட்டச்சத்து இல்லாத காரணத்தால் பலவீனமாக காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

ஆகவே, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் ஆறு வயதுக்குட்பட்ட சிறார்கள் மீது இத்திட்டம் கூடுதல் கவனம் செலுத்தும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சிறார் சத்துணவு திட்டம் தற்போது ஆய்வு நிலையில் உள்ளதோடு இதன் அமலாக்கம் தொடர்பான அம்சங்கள் குறித்து தொடர்ந்து விவாதிக்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.



Pengarang :