SELANGORYB ACTIVITIES

கோத்தா கெமுனிங் தொகுதிக்கு 1,000 உணவுக் கூடைகள்!

ஷா ஆலம் பிப் 6– கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியில் உள்ள குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவைச் சேர்ந்த  குடும்பங்களுக்கு கடந்த மாதம் தொடங்கி சுமார் ஆயிரம் உணவுக் கூடைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கம் காரணமாக பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளவர்களின் சுமையை ஓரளவு குறைக்கும் வகையில் இந்த உணவு பொருள் உதவித் திட்டம் அமல்படுத்தப்படுவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

சுமார் 80 வெள்ளி முதல் 90 வெள்ளி வரையிலான இந்த உணவுக் கூடைகள் அரிசி, சமையல் எண்ணெய், பிஸ்கட், சார்டின் போன்ற அத்தியாவசிப் பொருள்களை உள்ளடக்கியுள்ளதாக அவர் சொன்னார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட முதல் வாரத்தில் 480 உணவுக் கூடைகள் விநியோகிக்கப்பட்ட வேளையில் மேலும் 500 உணவுக் கூடைகள் அடுத்து வரும் வாரங்களில் விநியோகிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த உணவுப் பொருள் விநியோகம் தன்னார்வலர்கள் மற்றும் கிராமத் தலைவர்கள் வாயிலாக மேற்கொள்ளப்படுவதாக கூறிய அவர், உதவி தேவைப்படுவோர் நேரில் வந்தும் உணவுக் கூடைகளைப் பெற்றுக் கொள்வதாகச் சொன்னார்.

 


Pengarang :