ECONOMYNATIONALSELANGOR

கோவிட்-10: தகவல்களை மறைக்கும் தொழிற்சாலைகளை மூட வேண்டும்- சிலாங்கூர் அரசு பரிந்துரை

ஷா ஆலம், பிப் 6– கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட தங்கள் தொழிலாளர்கள் குறித்த தகவல்களை மறைக்கும் தொழிற்சாலைகளை மூடுவதற்கு சிலாங்கூர் அரசு மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளது.

புதிய தொற்று மையங்கள் உருவாக்கம் காண்பதை தடுப்பதற்கு ஏதுவாக நோய்ப் பரவலுக்கு காரணமானவர்கள் என அடையாளம் காணப்படும் தொழிலாளர்கள் அனைவரும் கோவிட்-19 பரிசோதனைக்குட்படுத்தப்பட வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

தங்கள் ஊழியர்கள் மத்தியில் காணப்படும் நோய்த் தொற்று தொடர்பான தகவல்களை மறைக்கும் மற்றும் நோயாளிகளை அடையாளம் காணும் முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்க மறுக்கும் தொழிற்சாலைகளை மூடுவது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும்படி மத்திய அரசை நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம் என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் 29ஆம் தேதி முதல் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டும் அளவுக்கு திடீர் உயர்வு கண்டதற்கு சுகாதார அமைச்சின் தகவல் முறையிடம் தாமதமாக தெரிவிக்கப்பட்ட பழைய சம்பவங்களே காரணம் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை கடந்தாண்டு இறுதியிலிருந்து நிலுவையில் இருந்து வருவதாகக் கூறிய அவர், நோய்த் தொற்று கண்டவர்கள் குறித்த தகவல்களை சுகாதார அமைச்சிடம் உடனடியாகத் தெரிவிக்கத் தவறும் தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவ மையங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது குறித்தும் மாநில அரசு பரிசீலித்து வருவதாகச் சொன்னார்.

நோய்த் தாக்கம் அதிகம் உள்ள இடங்களில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து கருத்துரைத்த அவர், புதிய தொற்று மையங்கள் உருவாகும் சாத்தியம் உள்ள தொழிற்சாலைகளில் கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த மருத்துவ பரிசோதனை மாநில சுகாதார இலாகா, செல்கேட் கார்ப்ரேஷன் சென்.பெர்ஹாட், மலேசிய தொழிற்சாலை உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் ஊராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் கொள்ளப்படும் என்றார் அவர்.

நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை மீறும் தொழிற்சாலைகளை மூடுவதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் இம்மாதம் 1ஆம் தேதி கூறியிருந்தார். இவ்விவகாரத்தில் மாநில அரசின் அதிகாரம் வரையறைக்குட்பட்டதாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நோய்த் தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களான பெட்டாலிங், உலு லங்காட் மற்றும் கோம்பாக்கில் மேலும் அதிகமான கோவிட்-19 மதிப்பீட்டு மையங்களை அமைப்பதற்கும் மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


Pengarang :