NATIONALSELANGOR

2020ஆம் ஆண்டில் மலேசியாவின் மக்கள் தொகை 32.73 மில்லியன் பேராக உயர்வு

புத்ரா ஜெயா, பிப் 11– கடந்த 2020ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் மலேசியாவின் மக்கள் தொகை 3 கோடியே 27 லட்சத்து 30ஆயிரமாக பதிவாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 0.4 விழுக்காடு அதிகமாகும். கடந்த 2019 நான்காம் காலாண்டில் இந்த எண்ணிக்கை 3 கோடியே 25 லட்சத்து 90 ஆயிரமாக இருந்தது.

இந்த மக்கள் தொகையில் 2 கோடியே 98 லட்சத்து 50 பேர் அதாவது 91.2 விழுக்காட்டினர் உள்நாட்டினராவர். எஞ்சிய 28 லட்சத்து 70 ஆயிரம் பேர் அதாவது 8.8 விழுக்காட்டினர் வெளிநாட்டினர் ஆவர்.

மலேசிய மக்கள் தொகையில் பெண்களை விட ஆண்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளதாக மலேசிய புள்ளி விபரத் துறையின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமது உஸீர் மஹிடின் கூறினார்.

அந்த கணக்கெடுப்பின் படி ஆண்கள் 1 கோடியே 68 லட்சத்து 30 ஆயிரம் பேராகவும் பெண்கள் 1 கோடியே 59 லட்சம் பேராகவும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சூழியம் வயது முதல் 14 வயது வரையிலான இளையோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதாக கூறிய அவர், கடந்த 2019ஆம்  நான்காம் காலாண்டில் 76 லட்சத்து 30 ஆயிரமாக இருந்த அவ்வெண்ணிக்கை இவ்வாண்டு அதே  கடந்தாண்டு அதே காலக்கட்டத்தில் 75 லட்சத்து 70 ஆயிரமாக குறைந்துள்ளது என்றார்.

கடந்த 2020ஆம் ஆண்டில்  4 லட்சத்து 68 ஆயிரத்து 975 குழந்தைகள் சுகப்பிரசவம்  வழி பிறந்ததாகவும் அக்குழந்தைகளில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 251 நான்காம் காலாண்டில் பிறந்தவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2019இல் 22 லட்சத்து 40 ஆயிரமாக இருந்த 65 வயதைக் கடந்த முதியவர்களின் எண்ணிக்கை கடந்தாண்டில் 23 லட்சத்து 40 ஆயிரமாக உயர்வு கண்டது என்றும் அவர் கூறினார்.

கடந்தாண்டில் பதிவான மொத்த மரண எண்ணிக்கை 1 லட்சத்து 74 ஆயிரத்து 313 ஆகும். கடந்த 2019ஆம் ஆண்டு நான்காம் காலாண்டில் 44,566 மரணங்கள் பதிவு செய்யப்பட்ட வேளையில் கடந்தாண்டு அதே காலக்கட்டத்தில் இந்த எண்ணிக்கை 0.4 விழுக்காடு குறைந்து 44, 390 ஆக பதிவானது என்றார் அவர்.

 


Pengarang :