MEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 தடுப்பூசியில் மனிதர்களின் சிந்தனையை மாற்றும் மைக்ரோசிப் உள்ளதா? அமைச்சர் கைரி ஜமாலுடின் மறுப்பு

கோலாலம்பூர், பிப் 15- மலேசியா பெற்றுள்ள கோவிட்-19 தடுப்பூசி பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானது என்பதோடு ஆக்ககரமான பலனையும் தரக்கூடியது என்று அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

மனிதர்களின் சிந்தனையை மாற்றக்கூடிய மைக்ரோசிப் எனப்படும் நுண் சில்லுகளை இந்த தடுப்பூசி கொண்டிருக்கவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்படவிருக்கும் கோவிட்-19  தடுப்பூசி பயன்பாட்டிற்கு அங்கீகரிப்பதற்கு முன்னர் பல லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டு சோதிக்கப்பட்டதாக தனது அகப்பக்கத்தின் வழி  வெளியிட்ட கட்டுரையில் இத்திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான அவர் தெரிவித்தார்

நாட்டில் பயன்படுத்தப்படவிருக்கும் கோவிட்-19 தடுப்பூசி மனிதர்களின் மரபணுவை மாற்றாது. மேலும், இந்த தடுப்பூசியை பயன்படுத்துவதால் உயிருக்கும் உடலாரோக்கியத்திற்கும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கான ஆதாரமும் இல்லை என்று அவர் சொன்னார்.

தடுப்பூசி என்பது அறிவியல் கண்டுபிடிப்பு. நாம் அறிவியலை நம்ப வேண்டுமே புலனத்தின் வாயிலாக பரப்பப்படும் பொய்யான தகவல்களை அல்ல. இறுதியில் அறிவியல்தான் வெல்லும் என்பதை நாம் உணர வேண்டும் என்றார் அவர்.

புதிய உலக ஒழுங்கு முறையை உருவாக்க முயலும் இலுமினாட்டிகளின் செயல் திட்டமாக இந்த தடுப்பூசி விளங்குவதாக பரப்பப்படும் குற்றச்சாட்டையையும் கைரி நிராகரித்தார்.

வதந்திகளையும் பொய்யான தகவல்களையும் புறந்தள்ளிவிட்டு இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கும் தடுப்பூசி  இயக்கத்திற்கு பொதுமக்கள் முழு ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

நமது சமூக தடுப்பூசித் திட்டம் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக விரைவாக பதிந்து கொள்வதற்கும் உரிய நேரத்தில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட சமூகத்தை உருவக்குவதன் மூலம் மட்டுமே பொருளாதார மீட்சியை விரைவுபடுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

 


Pengarang :