SELANGORYB ACTIVITIES

ஆண்டிஜென்  கருவி வழி 24 மணி நேரத்தில் கோவிட்-19 சோதனை முடிவுகள்

ஷா ஆலம், பிப் 18- சிலாங்கூர் மாநில அரசு ஏற்பாட்டில் பொதுமக்கள் மத்தியில் மேற்கொள்ளப்படும் கோவிட்-19 பரிசோதனையில் ஆண்டிஜென்(ஆர்.டி.கே.-ஏஜி) விரைவு சோதனைக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கருவியின் வழி 24 மணி நேரத்தில் சோதனை முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும்.

இந்த சோதனை முடிவுகள் செலங்கா செயலி வாயிலாக தெரியப்படுத்தப்படும் என்று மலேசிய இஸ்லாமிய மருத்துவ சங்கத்தின் கோவிட்-19 பணிக் குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அகமது முனாவார் ஹெல்மி கூறினார்

இங்குள்ள செக்சன் 19, எம்.பி.எஸ்.ஏ. மண்டபத்தில் நடைபெற்ற கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். 

இச்சோதனையின் போது நோய்த் தொற்று உள்ளவர்கள் கண்டு பிடிக்கப்பட்டால் அது குறித்து உடனடியாக மாவட்ட சுகாதாரத் துறையிடம் தெரிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சின் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைக்கேற்ப இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால் இந்த சோதனையின் பாதுகாப்பு குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று அவர் மேலும் சொன்னார்.

மருத்துவ துறை சார்ந்த பிரத்தியேக அரசு சாரா அமைப்பாக விளங்கி வரும் இந்த இஸ்லாமிய மருத்துவ சங்கம், கடந்த ஈராண்டுகளாக கிளினிக் செல்கேரின் தொண்டூழிய அடிப்படையிலான மருத்துவ சோதனைகளில் பங்கேற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :