NATIONAL

இறுதிக் கட்டத்தில் கோவிட்-19 தடுப்பூசி தருவிப்பு பணிகள்-சுகாதார அமைச்சு தகவல்

கோலாலம்பூர், பிப் 17- பைசர்-பயோன்டெக் நிறுவனத்திடமிருந்து கோவிட்-19 தடுப்பூசிகளை வரும் ஞாயிற்றுக்கிழமை தருவிப்பதற்கான இறுதிக் கட்டப் பணிகள் முழுத் தயார் நிலையில் உள்ளதாக சுகாதார இலாகாவின் ஆய்வு மற்றும் நுட்ப உதவிப் பிரிவுக்கான துணைத் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் ஹிஷாம்ஷா முகமது இப்ராஹிம் கூறினார்.

இப்பணியில் ஈடுபடுத்தப்படும் அனைத்து பணியாளர்களுக்கும் முறையான பயிற்சிகளை வழங்குவதும் இந்த தயார் நிலை ஏற்பாடுகளில் அடங்கும் என்று அவர் சொன்னார்.

தடுப்பூசிகள் சேமிப்பு மையங்கள் மற்றும் இதர மாநிலங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்வதை உறுதி செய்வது, தடுப்பூசியை செலுத்தும் பணியில் ஈடுபடும் சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி வழங்குவது போன்ற பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுவது உறுதி செய்யப் பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தடுப்பூசிகளை தருவிக்கும் பணியின் போது ஏற்படக் கூடிய பிரச்சனைகளை பயிற்சியின் போது அடையாளம் கண்டு அதற்கான தீர்வுகளையும் கண்டு பிடித்துள்ளோம். ஆகவே, தடுப்பூசி தருவிப்பு பணிகள் சுமூகமான முறையில் மேற்கொள்ளப்படும் என நம்புகிறோம் என்றார் அவர்.

கோவிட்-19 தடுப்பூசிகளை பாதுகாப்பாக வைப்பதற்கு ஏதுவாக போதுமான அளவு குளிர்பதன சாதனங்களை சுகாதார அமைச்சும் ஆயுதப் படைகளும் தயார் நிலையில் வைத்துள்ளதாக அவர் சொன்னார்.

முதல் கட்டமாக தருவிக்கப்படும் தடுப்பூசிகளை பாதுகாப்பாக வைப்பதில் சுகாதார அமைச்சுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Pengarang :