SELANGOR

கோவிட்-19 தடுப்பூசி கொள்முதல்- தயாரிப்பு நிறுவனத்துடன் சிலாங்கூர் நேரடி பேச்சுவார்த்தை

ஷா ஆலம், பிப் 18– கோவிட்-19 தடுப்பூசிகளை கொள்முதல் செய்வது தொடர்பில் சிலாங்கூர் அரசு சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்துடன்  நேரடியாக பேச்சு நடத்தும். இவ்விவகாரத்தில் இடைத்தரகர்களின் உதவி நாடப்படாது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சிலாங்கூர் மக்களுக்கு விநியோகிக்கப்படவிருக்கும் தடுப்பூசிகளை எந்த நிறுவனத்திடமிருந்து வாங்குவது என்பது குறித்து மாநில அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அவர் சொன்னார்.

தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது தொடர்பான முடிவை பின்னர் அறிவிப்புபோம். தடுப்பூசிகளை கொள்முதல்  செய்வதற்கு முன்னர் அனைத்து அம்சங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்றார் அவர்.

மாநில மக்களையும் பொருளாதாரத்தையும் காப்பாற்றும் நோக்கில் தடுப்பூசிகளை வாங்கும் முடிவை சிலாங்கூர் அரசு எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள தமது அதிகாரத்துவ இல்லத்தில் உணவுக் கூடைகளை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்திற்கு  மத்திய அரசு வழங்கவிருக்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையைத் தெரிந்து கொள்வதற்காக அடுத்த வாரம் தாம் அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாகத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடினை சந்திக்கவுள்ளதாகவும் அவர் அமிருடின் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மலேசியர்கள் மற்றும் அந்நியப் பிரஜைகளுக்கு வழங்குவதற்கு ஏதுவாக மாநில அரசு முப்பது  லட்சம் முதல் ஐம்பது லட்சம் வரையிலான கோவிட்-19 தடுப்பூசிகள் வாங்கும் என்று மந்திரி புசார் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தார்.

 


Pengarang :