ECONOMYNATIONAL

தடுப்பூசி இயக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் விவகாரங்களுக்குத் தீர்வு காண்பீர்- அன்வார் வலியுறுத்து

ஷா ஆலம், மார்ச் 16– கோவிட்-19 தேசிய தடுப்பூசி இயக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விவகாரங்களுக்கு மத்திய அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்  டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

அந்த தடுப்பூசியைப் பெறுவதற்கு மைசெஜாத்ரா செயலி  வாயிலாக விண்ணப்பம் செய்தவர்களில் சுமார் 14 லட்சம் பேர் முழுமையான தகவல்களைத் தரவில்லை என்ற செய்தி பல்வேறு கேள்விகளுக்கு இடமளித்துள்ளதாக அவர் சொன்னார்.

இணையத்தில் தங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ள பலர், அந்த செயலியில் தங்களின் பதிவு உறுதிசெய்யப்படுவதற்கு முன்னர் பதிவு நடவடிக்கையை பல முறை திரும்பத் திரும்ப மேற்கொள்ள வேண்டியுள்ளதாக முறையிட்டுள்ளதை தாம் அரசின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் எத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் அவர்  கேள்வியெழுப்பினார்.

தடுப்பூசியின் முக்கியத்துவத்தை குறிப்பாக, நோய்த் தடுப்பூசிக்கு எதிரான தரப்பினருக்கு எடுத்துரைப்பதிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவை என்றும் வினவினார்.

தடுப்பூசி தேவையில்லை எனக் கருதும் தடுப்பூசி எதிர்ப்புத் தரப்பினருக்கு நம்பிக்கையூட்டுவதில் அரசாங்கம் எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது? தடுப்பூசி மீது பொதுமக்களில் பலர் இன்னும் சந்தேகம் கொண்டுள்ள நிலையில் தடுப்பூசியின் பாதுகாப்பு தன்மை குறித்து அரசாங்கம் நன்கு ஆராய்ந்ததுண்டா? என்ற கேள்விகளுக்கும் விடை காண வேண்டியுள்ளது என்றார் அவர்.

மலிவான விலையைக் கொண்ட ரஷியாவின்  ஸ்புட்னிக் வி கோவிட்-19 தடுப்பூசியின் ஆக்கத் தன்மை குறித்து பல்வேறு எதிர்மறையான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. அதனைப் பெறுவது குறித்து அரசாங்கம் இப்போதுதான் அறிவிக்கிறது. இது குறித்து ஏன் முன்கூட்டியே கவனிக்கப்படவில்லை என்றும் அவர் வினவினார்.


Pengarang :