ECONOMYNATIONAL

தடுப்பூசித் திட்டத்திற்கான பதிவு- சிலாங்கூரை முன்மாதிரியாகக் கொள்வீர்- அன்வார் வலியுறுத்து

ஷா ஆலம், மார்ச் 17– தடுப்பூசித் திட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாக களத்தில் இறங்கி பதிவு நடவடிக்கைக்கு உதவி வரும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை பிற மாநிலங்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

தடுப்பூசிக்கான பதிவு நடவடிக்கையை மேற்கொள்வது கடினமான பணியாக உள்ளதை கருத்தில் கொண்டு சிலாங்கூர் மாநிலம் குறிப்பிட்ட சில இடங்களுக்கும் நேரடியாக வீடுகளுக்கும் சென்று பதிவு நடவடிக்கைக்கு உதவுவது ஆக்ககரமான ஒன்றாக விளங்குகிறது என்று அவர் சொன்னார்.

மைசெஜாத்ரா வாயிலாக மேற்கொள்ளப்படும் பதிவு நடவடிக்கை மிகவும் கடினமானதாக உள்ளது. அதிக பாரங்களை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. கிராமங்களைச் சேர்ந்த சாதாரண மக்களுக்கு இது சிரமத்தை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டார்.

தடுப்பூசித் திட்டத்திற்கான பதிவு நடவடிக்கையை எளிதாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்கு ஏதுவாக அரசாங்கம் செயல்திட்டம் ஒன்றை வரைய வேண்டும். தற்போது பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம் என்றார் அவர்.

கெஅடிலான் கட்சியின் அனைத்து  நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் அலுவலகங்களை தடுப்பூசித் திட்டத்திற்கான பதிவு மையமாக பயன்படுத்தும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

அதிகமானோர் தடுப்பூசித் திட்டத்தில் பங்கேற்பதை உறுதி செய்வதற்காக சந்தைகள் போன்ற மக்கள் கூடும் இடங்களுக்கும் வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று பதிவு நடவடிக்கைக்கு உதவும்படி அடிமட்டத் தலைவர்கள் பணிக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த 6ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :