ECONOMYSELANGOR

நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் வேலை வாய்ப்புச் சந்தை தொடரும்

ஷா ஆலம், மார்ச் 18- சிலாங்கூர் மாநில அரசினால் நடத்தப்படும் வேலை வாய்ப்புச் சந்தை இவ்வாண்டு நோன்பு பெருநாளுக்குப் பிறகு தொடரப்படும் என்று இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் ஒத்மான் கூறினார்.

மாவட்ட அளவில் இந்த வேலை வாய்ப்புச் சந்தையை நடத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் எனினும், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் நடப்பு நிலவரம் மற்றும் சம்பந்தப்பட்டத் தரப்பினர் வழங்கும் அனுமதி ஆகியவற்றைப் பொறுத்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு வேளை மாவட்ட எல்லைகளைக் கடப்பதற்கான அனுமதியை தேசிய பாதுகாப்பு மன்றம் ரத்து செய்தால் இந்த வேலை வாய்ப்புச் சந்தையை ஷா ஆலமில் மட்டும் நடத்த வேண்டி வரும் என்றார் அவர்.

கல்வித் தகுதிக்கேற்ப பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளை இந்த வேலை வாய்ப்புச் சந்தை ஏற்படுத்தித் தருவதால் இத்திட்டம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது என்று அவர் சொன்னார்.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய வேலை வாய்ப்புச் சந்தையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஷா ஆலம், கோல சிலாங்கூர், சுங்கை பூலோ, உலு லங்காட், கோம்பாக் ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் 105 முதலாளிகளும் பங்கு கொண்டனர்.

வேலையின்மைப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக 2021ஆம் ஆண்டில் பல்வேறு திட்டங்கள் வாயிலாக 15,000 வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்தாண்டு டிசம்பர் மாதம் கூறியிருந்தார்.


Pengarang :